tambaram pocso case accust  
க்ரைம்

“நான்கு மாதங்களாக நடந்த பாலியல் வன்கொடுமை” - கண்ணீர் மல்க தந்தையிடம் கூறிய சிறுமி.. தாம்பரத்தில் பரபரப்பு!

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் சிறுமிக்கு முகமது யூசுப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

சென்னை தாம்பரம் அருகே உள்ள ஆதி நகர் பகுதியில் வசித்து வருபவர் 56 வயதுடைய முகமது யூசுப். இவர் அதே பகுதியில் பிரியாணி தயாரிக்கும் குடோன் மற்றும் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்த குடோனில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவர் தனது 12 வயது மகளை, பள்ளி விடுமுறை நாட்களில் குடோனுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போது சிறுமியின் தந்தை அவரை கடையில் தனியாக விட்டு சென்ற நேரத்தில் முகமது யூசுப் சிறுமியிடம் தவறாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக அந்த சிறுமிக்கு முகமது யூசுப் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும், குறிப்பாக தனது தந்தையிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் சிறுமி தனது தந்தையுடன் குடோனுக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி வெளியேறிய நிலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் சிறுமிக்கு முகமது யூசுப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சிறுமியின் தந்தை மீண்டும் குடோனுக்கு திரும்பி வந்துள்ளார். இதையடுத்து கண்ணீர் மல்க சிறுமி தனக்கு கடந்த சில மாதங்களாக நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது யூசுப்பை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.