கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, திப்பனப்பள்ளி அருகே ஒண்டியனுார் கிராமத்தை சேர்ந்த திருப்பதி (40), என்பவர் கணித பட்டதாரி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்ததால், பெண் ஆசிரியர் ஒருவர் பொறுப்பு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் திருப்பதி, பள்ளிக்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால், அந்த பணிக்கு விண்ணப்பிக்க 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பள்ளியை அணுகி விசாரித்துள்ளார். இவர் தலைமையாசிரிருயக்கு அடுத்த படிநிலையில் உள்ளதால், அவரை சந்தித்து காலிப்பணியிடம் குறித்து கேட்டுள்ளார். அதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்காக சூளகிரி பகுதியை சேர்ந்த அந்த பெண் விண்ணப்பத்தை கொடுத்து சென்றுள்ளார். பணி குறித்த தகவல் தெரிவிப்பதாக கூறி விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர் திருப்பதி, அவரது மொபைல் எண்ணையும் வாங்கி கொண்டார்.
பின்னர் பெண்ணின் எண்ணிற்கு, ஆபாச குறுஞ்செய்தி மற்றும் அப்பெண்ணை ஆபாசமாக வர்ணித்து குறுஞ்செய்திகளை, ஆசிரியர் திருப்பதி அனுப்பி அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார். தான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கண்டித்தும் தொடர்ந்து, ஆபாச செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்படி, ஆசிரியர் திருப்பதியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஆசிரியர் திருப்பதி விவகாரம் தொடர்பாக, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் நரசிம்மன் தலைமையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. விரைவில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அறப்பணியாக செய்ய வேண்டிய ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது ஆசிரியர்களை நம்பியே அனுப்புகின்றனர். அவர்களே இது போன்ற தவறுகளில் ஈடுபடுவது, பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பை கேள்வி குறியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.