பதின்வயது இளைஞர், மசாஜ் செய்பவர் மற்றும் ஜன்னல் துடைப்பவர் போல் நடித்து, வயதான மற்றும் நலிவடைந்த பெண்களைக் குறிவைத்து தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
18 வயதான ஜிம்மி டாவ்ஸ் என்ற இளைஞர், பொய்யான வாக்குறுதிகளை அளித்து பெண்களின் வீடுகளுக்குள் நுழைந்து, அவர்களை ஆடையைக் களையுமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்வான்சீயில் உள்ள கோர்செய்னானைச் சேர்ந்த டாவ்ஸ், 89 வயதான இரண்டு மூதாட்டிகள், 85 வயதான ஒரு மூதாட்டி மற்றும் வீட்டிலேயே முடங்கியிருந்த 63 வயதான ஒரு மூதாட்டி ஆகியோரைச் சந்தித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. மே 15 அன்று, வீட்டில் தனியாக வசித்து வந்த 89 வயதான இரண்டு மூதாட்டிகளை டாவ்ஸ் தனித்தனியாகச் சந்தித்ததை அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் காலை சுமார் 11:30 மணியளவில் தனது வரவேற்பறையில் இருந்தபோது, யாரோ உள்ளே நுழைவதைக் கண்டுள்ளார். அது பக்கத்து வீட்டுக்காரராக இருக்கும் என்று கருதிய அவர், உள்ளே நுழைந்தது டாவ்ஸே என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை ஒரு மனநல மருத்துவர் என்று கூறியுள்ளார். அதனை அந்த பெண்ணும் நம்பியுள்ளார். பின்னர் அவர் அந்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, அவரது, மேலாடையையும் உள்ளாடையையும் கழட்டும்படி அறிவுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது கால்கள்தான் பிரச்சினை என்று டாஸிடம் தெரிவித்தபோது, அவர் தன்னை ஒரு பாலியல் சிகிச்சையாளர் என்றும், தவறான முகவரிக்கு வந்துவிட்டதாகவும் கூறி சென்றுள்ளார். பின்னர் டாவ்ஸ், அப்பகுதியில் இருந்த மற்றொரு இடத்திற்குச் சென்று, அங்கு இரண்டாவது வயதான பெண்ணை அணுகி, தனது மருத்துவரால் அனுப்பப்பட்ட மசாஜ் நிபுணர் என்று கூறியுள்ளார். தன்னை ஜான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர் அந்த பெண்ணை தன்னுடன் படுக்கையறைக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்றதும், டாவ்ஸ் அவரது ஆடையை கழற்றும் படி கூறியுள்ளார், முதலில் அவர் மறுத்துள்ளார். ஆனால், அது ஒரு 'உடல்-மீது-உடல்' மசாஜ் என்றும், அந்த சந்திப்பிற்காகவே வெகுதூரம் பயணம் செய்து வந்ததாகவும் வலியுறுத்தி டாவ்ஸ் பதிலளித்தார். அந்த பெண் தொடர்ந்து மறுத்ததால், அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பிறகு, ஜூன் 20 அன்று டாவ்ஸ் 85 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர் வீட்டில் இருந்தபோது, டாவ்ஸ் அவரது முன் மற்றும் பின் கதவுகள் இரண்டையும் தட்டி, தான் அவரது ஜன்னல்களைச் சுத்தம் செய்ததாகவும், வழக்கமாக ஜன்னல்களைச் சுத்தம் செய்பவரின் மகன் என்றும் கூறியுள்ளார். டாவ்ஸ் அந்தச் சேவைக்காக 55 பவுண்டுகள் கேட்க, அந்தப் பெண்ணும் பணத்தை எடுக்கத் தன் வீட்டிற்குள் சென்றுள்ளார். டாவ்ஸ் அந்த மூதாட்டியை பின்தொடர்ந்து உள்ளே சென்று, தவறான செய்கைகளை காட்டியுள்ளார். அந்த மூதாட்டி அவரை திட்டி பணத்தைக் கொடுக்க, அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அந்த மூதாட்டி, வழக்கமாகத் தன் ஜன்னலைச் சுத்தம் செய்பவரிடம் அந்த ஆளைப் பற்றி விசாரித்தபோது, அவருக்கு அவனைத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த நாள், ஜூன் 21 அன்று, அவர் தனது நான்காவது இலக்கான, நடமாடுவதில் சிரமம் உள்ள, வீட்டிலேயே முடங்கியிருந்த 63 வயதுப் பெண்ணைக் குறிவைத்தார். டாவ்ஸ் ஜன்னல் வழியாக அவரிடம் தான் ஒரு மசாஜ் சிகிச்சையாளர் என்று தெரிவித்தார்.அந்தச் சேவை யாருக்கானது என்று அந்த மூதாட்டி கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அவர், யாரோ ஒருவர் அதற்காக £55 செலுத்தியிருப்பதாகவும், "அது வீணாவது அவமானகரமானது" என்றும் நயமுடனே பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பின்னர் பாலியல் குற்ற நோக்குடன் அத்துமீறி நுழைதல், பாலியல் வன்கொடுமை , மோசடி மற்றும் அவசரக்காலப் பணியாளரைத் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளை டாவ்ஸ் மீது பதியப்பட்டது, அக்குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், நீதிபதி டாஸை ஒரு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டார். இரண்டு வாரங்களில் பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.