

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரே சர்வீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பொது கழிவறையில் பிறந்து 10 நிமிடமே ஆன பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்த சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியில் பர்வீனா(65) என்ற மூதாட்டி குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கழிவறைக்குள் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடன் பணிபுரியும் பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜீவா(45), செம்மஞ்சேரியை சேர்ந்த காமாட்சி(40) ஆகியோரிடம் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து மூவரும் சேர்ந்து சூப்பர்வைசரிடம் தகவல் கூறி செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூய்மை பணியாளர்கள் உதவியுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஆண் குழந்தையை மீட்ட போலீசார் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் சைரன் ஒலித்தபடி அதிவேகமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து குழந்தையை காப்பாற்றினர்.
போலீசார் வாகனத்தில் இருந்து பச்சிளம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்று மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு காவலர் ஓடிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பலரிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்க குழந்தைகள் ஆம்புலன்ஸ் வர வைத்து குழந்தையை வென்ட்டிலேட்டரில் வைத்து பாதுகாப்பாக 108 குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் உடன் அனுப்பி வைத்தனர்.
செம்மஞ்சேரி காவல் துறையினர் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை தங்கள் குழந்தையாய் நினைத்து அருகில் இருந்து பார்த்துக் கொண்ட சம்பவம் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை வீசி சென்ற பெண் யார் என்பது குறித்தும், குழந்தையை வீசி சென்றதற்கான காரணம் குறித்தும் தவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.