தெலுங்கானா மாநிலம், ஹனுமகொண்டா மாவட்டம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் 37 வயதுடைய அனில். இவர் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரஜிதா என்ற பெண்ணை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு நான்கு மற்றும் இரண்டு வயதில் குழந்தைகள் உள்ளனர். அனில் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் நிலையில் ரஜிதா வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்து வந்திருக்கிறார். நாளடைவில் வீட்டில் இருக்கும் மனைவி மீது அனிலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரஜிதா வேறு ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக நினைத்த அனில் தினந்தோறும் அவரை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அனில், தனது மனைவி ரஜிதாவின் கை, கால்களை கயிற்றால் கட்டிலில் கட்டிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
ரஜிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காகதியா பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஜிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தாயை தந்தை எப்படி கொலை செய்தார் என நான்கு வயது மகன் வாக்குமூலம் அளித்துள்ளார். “அம்மாவை கட்டிலில் கட்டிப்போட்டு அப்பா கழுத்தறுத்தார்” என சிறுவன் பேசும் வீடியோ தற்போது சமுத்திக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அனிலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகளும் பரிதவித்து நிற்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.