தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில், இதயம் மற்றும் கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகள் சாலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (நவ 03) காலை மகபூபாபாத் மாவட்டம் சின்ன வாங்காரா புறவழிச்சாலை வழியாகச் சென்ற பொதுமக்கள், அங்கு இதயம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாகக் காவல் துறையினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்தப் பகுதியைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர், சாலையில் கிடந்த உறுப்புகள் போன்ற பாகங்களை மீட்டு, அவை என்ன என்பதை உறுதிப்படுத்துவதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மீட்கப்பட்ட பாகங்கள் உண்மையில் மனித உடல் உறுப்புகளா அல்லது இறைச்சிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் உறுப்புகளா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மருத்துவ ஆய்வகப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இதுகுறித்துத் தெளிவான தகவல் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அவை மனித உறுப்புகள் என்பது உறுதி செய்யப்பட்டால், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், மருத்துவக் கழிவுகள் அலட்சியமாகக் கொட்டப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்தப் பாகங்கள் சாலையில் வீசப்பட்டனவா என்பதையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆய்வக அறிக்கை வெளியான பிறகே இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும். இந்நிலையில் அப்பகுதி மக்களிடையே இந்த சம்பவம் வேகமாக பரவி சாலையில் இதயம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் காணப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.