நள்ளிரவில் கதவைத் தட்டிய மர்ம நபர்.. கோவிலில் பூ போட்டு பார்த்த தாய்! 7 வயது சிறுமி மாயமான வழக்கில் திடீர் திருப்பம்?

அருகே வசிக்கும் மூதாட்டி மணிமேகலையின் வீட்டுக் கதவை மர்ம நபர் யாரோ மூன்று முறை தட்டியதாக அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்
நள்ளிரவில் கதவைத் தட்டிய மர்ம நபர்.. கோவிலில் பூ போட்டு பார்த்த தாய்! 7 வயது சிறுமி மாயமான வழக்கில் திடீர் திருப்பம்?
Published on: 
Updated on: 
1 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி வடிவேலு மற்றும் பவானி. இவர்களின் 7 வயது மகள் ஹேமாவதி, அக்டோபர் 11ம் தேதி இரவு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் 12ம் தேதி அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணாமல் போயுள்ளார். அதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை குழந்தை கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமி கிடைக்காத நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்டது. குழந்தை மாயமாகி 18 நாட்கள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. 

தற்போது இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி காணாமல் போய் 18 நாட்களை கடந்தும் இதுவரை அவரைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சிறுமியின் தந்தை, தாய் பவானி, சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரிடம் தனித்தனியாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சிறுமி காணாமல் போன நாளில் அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் மூதாட்டி மணிமேகலையின் வீட்டுக் கதவை மர்ம நபர் யாரோ மூன்று முறை தட்டியதாக அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் சொல்வது உண்மை எனில் யார் அந்த மர்ம நபர்? என்ற கோணத்திலும் விசாரணை நகர்ந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த சம்பவம் உள்ளது. இருப்பினும், அந்த நபர் யார், அவருக்கும் சிறுமி மாயமான சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையே, மாயமான தனது மகள் விரைவில் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் அவரது தாய் பவானி கோவில்களில் வழிபட்டு வருகிறார். வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் தினமும் கற்பூரம் ஏற்றி, மகள் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று வேண்டி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும், சிவன் கோவிலில் பூ போட்டுப் பார்த்தபோது, குழந்தை உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் பவானி கூறியுள்ளார். இதனால் தனது மகள் கண்டிப்பாகக் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  சிறுமியை மீட்கும் நோக்கில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினரும் சிறுமி விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com