தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த கருப்பையாவின் மகன் ஜெயக்குமார் (27). கடந்த 4ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் செல்போனில் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் ராணி, மறுநாள் காலை போடி தாலுகா காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, போடி தாலுகா அம்மாபட்டியில் இருந்து பெருமாள்கவுண்டன்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள விநாயகம் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில், கிணற்றின் அருகே சில செருப்புகளும், ஜெயக்குமாரின் உடைகளும் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த கிணற்றில் யாரேனும் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு, காயங்களுடன் ஜெயக்குமாரின் உடல் கிணற்றுக்குள் இருந்து அரை நிர்வாணமாக மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஜெயக்குமாரின் நண்பர்களான போடியைச் சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் சின்னமனூரைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரும் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடியபோது, அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சின்னமனூரைச் சேர்ந்த விக்னேஷின் யமஹா R15 இருசக்கர வாகனத்தை கடந்த ஜூன் மாதம் ஜெயக்குமார் எடுத்துக்கொண்டு தனது சொந்த நிகழ்ச்சிக்காக கம்பம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாகவும், போக்குவரத்து போலீசாரின் சோதனையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இருசக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது அபராதத் தொகையை தானே செலுத்துவதாகவும், தனது நிகழ்ச்சிக்காகத்தான் வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும் ஜெயக்குமார், விக்னேஷிடம் கூறியுள்ளார்.
ஆனால், ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் மேலும் ரூ.2 ஆயிரம் செலவாக மொத்தம் ரூ.12 ஆயிரத்தை ஜெயக்குமார் விக்னேஷிடம் கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் தனது சொந்த பணத்தை ஏற்பாடு செய்து இருசக்கர வாகனத்தை மீட்டதாகவும், பின்னர் அந்த தொகையை ஜெயக்குமார் தருவதாகக் கூறி தொடர்ந்து காலம் கடத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பணத்தை கொடுக்க முடியாது என ஜெயக்குமார் தெரிவித்ததுடன், விக்னேஷின் தொலைபேசி அழைப்புகளையும் ஏற்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், தனது நண்பரான ஹரிபிரசாத்தை அழைத்துக்கொண்டு ஜெயக்குமாரை தேடிச் சென்றுள்ளார்.
சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் விக்னேஷ் மற்றும் ஹரிபிரசாத் இருவரும் மது அருந்திவிட்டு ஜெயக்குமாரை தேடியுள்ளனர். அப்போது சிலமரத்துப்பட்டி மதுபானக் கடை அருகே ஜெயக்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அவரை பார்த்த விக்னேஷ் மற்றும் ஹரிபிரசாத் பணம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பொது இடத்தில் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்றும், வேறு இடத்திற்குச் சென்று பேசிக்கொள்ளலாம் என்றும் கூறி ஜெயக்குமாரை இருவரும் தங்களுடன் அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்ட அதே இருசக்கர வாகனத்தில் ஜெயக்குமாரை ஏற்றிக்கொண்டு அம்மாபட்டியில் இருந்து பெருமாள்கவுண்டன்பட்டி செல்லும் சாலைப்பகுதிக்கு மூவரும் சென்றுள்ளனர்.
அங்குள்ள தென்னந்தோப்பில் வைத்து மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஜெயக்குமாரின் ஆடைகளை களைந்து, தென்னை மரங்களுக்கு சொட்டு நீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயால் அவரது கை, கால்களை கட்டி, விக்னேஷ் மற்றும் ஹரிபிரசாத் இருவரும் ஜெயக்குமாரை தாக்கியதாகவும், இதில் அவர் பலத்த காயமடைந்து மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த ஜெயக்குமாரை அங்கிருந்த சுமார் 110 அடி ஆழமுள்ள கிணற்றில் தூக்கி வீசிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றினர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் மற்றும் ஹரிபிரசாத் ஆகிய இருவரையும் போடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். காவல்துறையினரால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவது தொடர்பாக நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட ரூ.12 ஆயிரம் பணத் தகராறு, இறுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமாக மாறியிருப்பது போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்