“என்ன ஆச்சு?.. போனில் கேட்ட மனைவியின் அலறல்” - கழுத்தை நெரித்த மர்ம நபர்கள்.. குவைத்தில் இருந்து கணவன் செய்த செயல்!

கலைச்செல்வியை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்...
madurai theft issue
madurai theft issue
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி அ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கலைச்செல்வி குழந்தைகளுடன் தனியாக அ.புதுப்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றிருந்ததால், கலைச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குவைத்தில் வேலை செய்து வரும் தனது கணவர் இளங்கோவனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அந்த நேரத்தில் திடீரென வீட்டிற்குள் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த பரசுராம் மற்றும் சிங்கம்புணரியைச் சேர்ந்த அவரது நண்பர் ரஞ்சித் ஆகிய இருவரும், தனியாக இருந்த கலைச்செல்வியை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கலைச்செல்வியின் கழுத்தை சேலையால் நெரித்து, அவர் அணிந்திருந்த நகைகளை பறிக்க இருவரும் முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி அலறி சத்தமிட்டு நிலையில் அப்போது செல்போனில் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த இளங்கோவன், அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஏதோ விபரீதத்தை உணர்ந்துள்ளார்.

இதையடுத்து, இளங்கோவன் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த அவர்கள் விரைந்து இளங்கோவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்த அவர்கள்,  சத்தம் எழுப்பியபடி உடனடியாக கலைச்செல்வியை மீட்டு மற்றவர்களை உள்ளே வைத்து வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டியுள்ளனர். இதற்கிடையே, வீட்டிற்கு வெளியே காவலுக்கு நின்றதாக கூறப்படும் பரசுராமின் மற்றொரு நண்பரான அ.கோவில்பட்டியைச் சேர்ந்த தினேஷ், பொதுமக்கள் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

Admin

பின்னர் மேலூர் மற்றும் கீழவளவு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார், வீட்டிற்குள் சிக்கியிருந்த பரசுராம் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் கலைச்செல்வியை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து இளங்கோவனின் வீட்டின் முன்பு ஏராளமான கிராம மக்கள் திரண்டனர். வீட்டிற்குள் சிக்கியிருந்த இருவரையும் தங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, போலீசார் பரசுராம் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து பொதுமக்களிடம் காண்பித்துவிட்டு, மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

மேலும், சம்பவம் குறித்து தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், தப்பியோடியதாக கூறப்படும் தினேஷை விரைந்து பிடிக்கவும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைச்செல்வியிடமும் போலீசார் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்றதாக கூறப்படும் இந்த சம்பவம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com