THENI BODINAYAKANUR GH BABY DEATH 
க்ரைம்

போடி அரசு மருத்துவமனையில் அவலம்... "மருத்துவர் இல்லாததால் பூமிக்கு வரும் முன்னே மேலே சென்ற உயிர்"

போடி அரசு மருத்துவமனையில் இரவு நேர டூட்டி டாக்டர் இல்லாததால் இறந்த ஆண் சிசு. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

Anbarasan

தேனி மாவட்டம் போடி சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் நல்லதம்பி சரண்யா தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான சரண்யா இரவு ஒரு மணி அளவில் நீர் குடம் உடைந்த நிலையில் பிரசவ சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு நேர டூட்டி டாக்டர் சுகந்தி வராததால் மருத்துவமனை செவிலியர்கள் அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்ததாகவும் மருத்துவர் சுகந்தி அழைப்பை எடுக்காததால் மாற்று மருத்துவரை அதிகாலை ஆறு மணியளவில் வரவழைத்து பிரசவம் பார்த்து உள்ளனர். நீர் குடம் உடைந்து குழந்தை நீரினை பருகி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக 6.30 மணி அளவில் செவிலியர்கள் சரண்யாவின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு இரவு ஒரு மணி அளவில் அவசர பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சரண்யாவை அதிகாலை 6 மணி வரை மருத்துவர்கள் இல்லாமல் பிரசவ வேதனை உடன் குழந்தையை சிசுக்கொலை செய்ததாகவும். மருத்துவர் இல்லா விட்டாலும் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தால் கூட குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் மருத்துவர் வந்துவிடுவார் என அழைக்களிப்பு செய்து சிசுக்கொலை செய்ததாகவும் இந்த குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போடி அரசு மருத்துவமனை முன்பாக சரண்யாவின் கணவர் நல்லதம்பி மற்றும் அவருடைய உறவினர்கள் அமர்ந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போடி நகர் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவீந்திரநாத் இடம் நாம் கேட்டபோது போடி அரசு மருத்துவமனையில் ஆறு பொது மருத்துவர்கள் மற்றும் ஒரு பிரசவ மருத்துவர் பற்றாக்குறை உள்ளதாகவும் நாள்தோறும் போடி மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவிலான நபர்கள் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாகவும் விரைந்து மருத்துவ பற்றாக்குறை சரி செய்யப்பட்டு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்