மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் 35 வயதுடைய பாண்டித்துரை. தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகியும் குழந்தைகள் இல்லை.இந்நிலையில், (செப் 01) ஆம் தேதி இரவு பாண்டித்துரை மதுபோதையில் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் ரதிராஜன் தெருவில் வசித்து வரும் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற அவர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராஜேஷ் கண்ணனும் அவரது மனைவி சிந்துஜாவும் பாண்டித்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
அப்போது ராஜேஷ் கண்ணன் பாண்டித்துரையை தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிந்துஜா வீட்டின் சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து பாண்டித்துரையை சரமாரியாக குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாண்டித்துரையின் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. கத்திக்குத்தில் படுகாயமடைந்த பாண்டித்துரை ரத்தம் வழிந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். சிறிது தொலைவு சென்ற நிலையில், ரத்தப்போக்கு அதிகமாகி சாலையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாண்டித்துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் பாண்டித்துரை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, பாண்டித்துரையின் மனைவி நித்யா போலீசில் அளித்த புகாரில், ராஜேஷ் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், இதன் காரணமாக பாண்டித்துரைக்கும் ராஜேஷ் கண்ணனின் மனைவி சிந்துஜாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காரணமாக பாண்டித்துரைக்கும் தமக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் நித்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, பாண்டித்துரையும் நித்யாவும் மதுரை திருநகரில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், விடுமுறைக்காக திருமங்கலம் வந்திருந்த ராஜேஷ் கண்ணன், தனது மனைவி சிந்துஜாவுடன் வீட்டில் இருந்தபோது பாண்டித்துரை அங்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கள்ளத்தொடர்பு விவகாரம் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் நகர் போலீசார், ராஜேஷ் கண்ணன் மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம், கத்திக்குத்து சம்பவத்தில் இருவரின் பங்கு மற்றும் பாண்டித்துரையுடன் ஏற்பட்ட முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் உறவினர் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படும் இளைஞர், கத்திக்குத்தில் உயிரிழந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்