“கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருக்க இப்படியா?” - 7 துண்டுகளாக வெட்டப்பட்ட சடலம்.. சேலம் கொலையில் வெளிவந்த பின்னணி!

மூட்டைகளை திறந்து பார்த்தபோது, பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது...
water tank murder case
water tank murder case
Published on
Updated on
3 min read

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே மாயமான 50 வயது பெண், அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளின் தண்ணீர் தொட்டிகளில் உடல் துண்டுகளாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நகைக்காக பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். கூலி வேலை செய்து வரும் இவரது இரண்டாவது மனைவி 50 வயதுடைய தங்கமணி. இவர் சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

வழக்கம் போல் கடந்த (ஆக 28) -ஆம் தேதி வீட்டு வேலைக்காக சென்ற தங்கமணி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கமணி வேலைக்குச் சென்ற சங்கர் நகர் பகுதிக்கு சென்று அவரைத் தேடியுள்ளனர். ஆனால், அவர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கமணியை காணவில்லை என அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஜீவானந்தம் புகார் அளித்தார்.

இதற்கிடையில், சேலம் நான்கு ரோடு அருகே உள்ள அரிசிப்பாளையம் பகுதியில் ரமேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோரது வீடுகளின் மாடியில் இருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டைகள் கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் அங்கு சென்று மூட்டைகளை திறந்து பார்த்தபோது, பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், மூன்று மூட்டைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் சுமார் 7 துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், மீட்கப்பட்ட உடல் பாகங்களில் ‘ராஜேந்திரன்’, ‘கணபதி’ உள்ளிட்ட பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தண்ணீர் தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்டது காணாமல் போன தங்கமணியின் உடல் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நகைக்காக கொலை?

இந்த கொலை சம்பவத்தில் துப்பு துலக்க தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தங்கமணியின் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு வந்த நபர்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது, சேலம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த 28 வயதுடைய நந்தினி என்ற பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நந்தினியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தங்கமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில், நந்தினி, சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த மாலிக் 30 வயதுடைய பாஷா, சேலம் குரங்குச்சாவடியைச் சேர்ந்த சிவராமன் (28) ஆகிய மூவரும் சமையல் வேலை செய்து வந்தது தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி வீட்டு வேலைக்குச் சென்றபோது தங்கமணியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் தங்கமணியை மாலிக் பாஷா மற்றும் சிவராமனுக்கும் அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மூவரும் தங்கமணியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வேலைக்குச் சென்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நந்தினிக்கும் மாலிக் பாஷாவுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக மாலிக் பாஷா அதிகளவில் பணம் செலவு செய்ததால், அவருக்கு கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. கடனை அடைக்க முடியாமல் மாலிக் பாஷா சிரமப்பட்டு வந்த நிலையில், தங்கமணி அணிந்திருந்த தங்க நகைகளைப் பார்த்த நந்தினி, அவற்றை வாங்கி அடகு வைத்து கடனை சமாளிக்கலாம் என கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மொட்டை மாடியில் நடந்த சம்பவம்

இதையடுத்து கடந்த (ஆக 28) -ஆம் தேதி நந்தினி, தங்கமணியை அழைத்துக்கொண்டு சேலம் நான்கு ரோடு அருகே உள்ள சாமிநாதபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இரவு நந்தினி, மாலிக் பாஷா, சிவராமன் மற்றும் தங்கமணி ஆகியோர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்துள்ளனர். அப்போது தங்கமணி அணிந்திருந்த சுமார் 3 சவரன் தங்க நகைகளை தருமாறு மூவரும் கேட்டதாகவும், அவற்றை அடகு வைத்து பின்னர் திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தனது கணவரிடம் நகைகளை கொடுத்துவிட்டதாக கூறி தங்கமணி நகைகளை தர மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் தங்கமணியை தாக்கியபோது, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலை 7 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீச்சு

தங்கமணி உயிரிழந்ததை அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நந்தினி, மாலிக் பாஷா மற்றும் சிவராமன் ஆகியோர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்த கத்தியை பயன்படுத்தி தங்கமணியின் உடலை 7 துண்டுகளாக வெட்டியுள்ளனர். தொடர்ந்து உடல் பாகங்களை சாக்குப்பைகளில் கட்டிய மூவரும், அருகில் இருந்த ரமேஷின் வீட்டின் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் இரண்டு மூட்டைகளையும், சீனிவாசன் வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் மற்றொரு மூட்டையையும் வீசியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனிடையே, தங்கமணியிடம் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 3 சவரன் தங்க நகைகளை மூவரும் சேர்ந்து அடகு கடையில் விற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த நகைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நந்தினி, மாலிக் பாஷா மற்றும் சிவராமன் ஆகிய 3 பேரையும் பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டு வேலைக்குச் சென்ற 50 வயது பெண் மாயமான நிலையில், அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தண்ணீர் தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com