நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள ஆணையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் மகன் 35 வயதுடைய சுந்தர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுந்தர் மூலக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி முத்துமாரி என்பவர் பத்திரம் எழுத வந்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இதனை அறிந்த முத்துமாரியின் கணவர் அவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. எனவே முத்துமாரி தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுந்தருடன் சென்றிருக்கிறார். இதையறிந்த சுந்தர் மனைவி கணவருடன் கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து சுந்தர் இட்டேரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து முத்துமாரி மற்றும் அவரது குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியின் கணவர் மணிகண்டன் சுந்தரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மூலைக்கரைப்பட்டி அலுவலகத்திற்கு சுந்தர் புறப்பட்டு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் சுடலை ஆகியோர் சுந்தரை வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த சுந்தர் இருச்சக்கர வாகனத்தை அங்கே விட்டு விட்டு தப்பி ஓட முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் அதற்குள் இருவரும் சுற்றி வளைத்து அரிவாளால் சுந்தரை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுந்தர் நிலை குலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் வேல் ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பரை பிடித்து விசாரணை செய்ததில் கொலைக்கான முழு விவரம் தெரியவந்துள்ளது. மனைவியின் கள்ளக்காதலனை கணவன் ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.