“திருமணத்திற்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்த சகோதரிகள்” - கல்யாணத்தன்று அதிகாலையில் நடந்த சோகம்… குடும்பம் தான் காரணமா?
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள மனாய் கிராமத்தை சேர்ந்தவர் தீப் சிங். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 25 வயதில் ஷோபா மற்றும் 23 வயதில் விமலா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இருவரும் படிப்பை முடித்துவிட்டு அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். இருவருக்கு அவர்களது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் இரண்டு சகோதரிகளுக்கும் ஒரே மேடையில் கடந்த (பிப் 21) ஆம் தேதி திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கின்றனர்.
அதன்படி சனிக்கிழமை (பிப் 20) ஆம் தேதி பகல் முழுவதும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வந்த நிலையில் இரண்டு சகோதரிகளும் உறவினர்களுடன் சாதாரணமாக பேசி சிரித்து கொண்டு இருந்துள்ளனர். பின்னர் அன்றிரவு தங்களது அறைக்கு உறங்க சென்ற இருவருக்கும் அதிகாலை 4 மணி அளவில் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக சொல்லப்படும் நிலையில் அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு எடுத்து வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு சகோதரிகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரும் விஷம் குடித்து இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
ஆனால் சகோதரிகளின் அறையில் தற்போது வரை தற்கொலைக்கான எந்த ஒரு குறிப்பும் கைப்பற்றத நிலையில் தொடர்ந்து இது கொலையா? அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இறந்த பெண்களின் தாய் மாமா இவர்கள் இறந்ததற்கு குடும்பம் தான் காரணம் என்றும் உயிரிழந்த சகோதரிகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
