திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அருகே உள்ள காலி பிளாட்டில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஆண், பெண் இருவரும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தவெக கட்சியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சஞ்சீவி காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிப்பருவக் காதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த இரட்டைக் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் தாலுகா, தோரணம்பதி அருகே உள்ள தனியார் பிளாட்டில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர், காரின் அருகே ஆண், பெண் இருவரும் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் கிராமிய போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் திருப்பத்தூர் மாவட்டம், திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவியின் மனைவி 30 வயதுடைய மாலினி என்பதும், ஆண் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பாச்சல் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ரஞ்சித் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, இருவரின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாலினிக்கும் சிரஞ்சீவிக்கும் சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதும், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், மாலினிக்கும் அவரது பள்ளிப்பருவக் காதலரான சஞ்சீவி காந்தி என்பவருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் சிரஞ்சீவிக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் மாலினியைக் கண்டித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாலினிக்கு அவரது உறவினரான ரஞ்சித் என்பவருடனும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மாலினிக்கும் சஞ்சீவிகாந்திக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலினியைச் சந்திப்பதற்காக சஞ்சீவிகாந்தி திருப்பத்தூர் வந்துள்ளார். இதேவேளையில், மாலினியின் மற்றொரு கள்ளகாதலனான ரஞ்சித், திருவண்ணாமலையில் இருந்து தனது பாட்டி லட்சுமியை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, தனிமையில் இருக்க மாலினியை திருப்பத்தூர் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. இதனை அறிந்த சஞ்சீவிகாந்தி, இருசக்கர வாகனத்தில் இருவரையும் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, திருப்பத்தூர் - சேலம் சாலையில் தோரணம்பதி அருகே உள்ள காலி பிளாட்டில் காரை நிறுத்தி மாலினியும் ரஞ்சித்தும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற சஞ்சீவிகாந்தி, மாலினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனைத் தடுக்க முயன்ற ரஞ்சித்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது, சஞ்சீவிகாந்தி அரிவாளால் ரஞ்சித்தைத் தாக்கியதுடன், மாலினியையும் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது திடீர் மோதலில் நிகழ்ந்ததா என்றும் விசாரித்து வந்தனர். மேலும் இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சஞ்சீவிகாந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் ஆண், பெண் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.