திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரண்ராஜ் இவரது மனைவி 35 வயதான ஷீலா இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரண் ராஜ் அதே பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில நண்பர்களுடன் சேர்ந்து சரண்ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
எனவே தினந்தோறும் குடித்துவிட்டு வந்து ஷீலாவை கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . மேலும் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரிடம் சரண் ராஜ் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கணவன் மனைவியை சமதானம் செய்து வாழ வைத்து வந்துள்ளனர். இருப்பினும் சரண் ராஜ் குடித்துவிட்டு தகராறு செய்வதை நிறுத்தாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஷீலா சரண் ராஜிடம் வாக்குவாதம் செய்து பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். காலை உறவினர் வீட்டில் இருந்த மனைவி ஷீலாவை அவர்களது வீட்டிற்கு சரண் ராஜ் அழைத்துக்கொண்டு வந்து பேசி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது கணவன் மனைவி இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் இருந்த சரண் ராஜ் வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியால் மனைவி ஷீலாவை வயிற்றில் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஷீலா வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கீழே சரிந்துள்ளார். தான் குத்தியதால் மனைவி ஷீலா உயிரிழந்து விட்டதாக நினைத்து பயத்தில் அதே அறைக்கு சென்று உள்பக்கமாக அறையின் கதவை தாழிட்டு சரண்ராஜ் வீட்டில் இருந்த புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஷீலா அலறிய சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் உள்பக்கம் தாழிட்டிருந்ததால் இருந்த நிலையில் கதவை திறக்க முடியவில்லை.
எனவே அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் கதவை உடைத்து இருவரையும் மீட்டனர். இதில் கணவர் சரண் ராஜ் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த மனைவி ஷீலாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சரண் ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.