திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர ஜோதி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 17 வயதில் கௌதம் என்ற மகன் உள்ளார். கெளதம் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த (ஜன 07) ஆம் தேதி அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை பார்த்த அக்கம் அப்பகுதி மக்கள் பள்ளி மாணவன் கௌதமை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சற்று சுய நினைவு திரும்பிய நிலையில் “தன்னை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மோகன், பிச்சைமுத்து, ராஜா,சரவணன், சாமிதாஸ், ரமேஷ் ஆகியோர் சுற்றி வளைத்து வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை முயற்சி செய்ததாக” போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்தார்.
பின்னர் தற்கொலை வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் மாணவனின் தந்தையான ஜோதிக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையில் உள்ள நில தகராறு காரணமாக உறவினர்கள் மாணவனை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து ஜோதியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தனது மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை கொலை செய்ய முயற்சி செய்த நபர்களை உடனடியாக கைது வேண்டும் என்றும் கெளதமின் தாய் ஜெயந்தி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். நிலத்தகராறில் மாணவன் வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.