Thiruvannamalai Murder 
க்ரைம்

“குடும்பத்தை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி” - ஊர் திரும்பியவருக்கு காத்திருந்த எமன்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டம், துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அய்யனார், அவரது தாய் பவானி மற்றும் அருணாவின் கணவர் அண்ணாமலை ஆகிய 3 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். துர்க்கைநம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சரத்குமார். இவருக்கு திருமணமான நிலையில் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.

சரத்குமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான அருணா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களாக திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சரத்குமார் மற்றும் அருணா வீட்டை விட்டு வெளியேறி வெளியூருக்கு சென்று குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அருணாவின் குடும்பத்தினருக்கும் சரத்குமாரின் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கெனவே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் பணி காரணமாக சரத்குமார் மீண்டும் துர்க்கைநம்மியந்தல் கிராமத்திற்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அருணாவின் அண்ணன் அய்யனார், தாய் பவானி மற்றும் அவரது கணவர் அண்ணாமலை ஆகியோர் கடந்த (ஆக 31) ஆம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்று சரத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சரத்குமாரின் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன்

இந்த மோதலை பார்த்த சரத்குமாரின் அண்ணன் ஜம்பு, தகராறை விலக்கி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அப்போது சரத்குமாரை கத்தியால் குத்துவதற்காக அய்யனார் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஜம்பு, தனது தம்பியை காப்பாற்றும் நோக்கில் இடையில் சென்றுள்ளார். அப்போது அய்யனார் கையில் வைத்திருந்த கத்தி ஜம்புவின் வயிற்றில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஜம்பு சம்பவ இடத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜம்புவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3 பேர் காவல் நிலையத்தில் சரண்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, ஜம்புவின் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் அய்யனார், அவரது தாய் பவானி மற்றும் அருணாவின் கணவர் அண்ணாமலை ஆகிய 3 பேரும் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்

இதற்கிடையே, ஜம்புவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள புறவழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தொடங்கிய தகராறு, இருதரப்பு மோதலாக மாறி, தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் கத்திக்குத்தில் உயிரிழந்த சம்பவம் துர்க்கைநம்மியந்தல் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்