“அலறிய சிறுமி.. ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்” - வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறல்.. 25 வயது வாலிபர் போக்சோவில் கைது!

போலீசார் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தவிர்க்க ஆனந்தராஜை மறைத்து அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது...
Selaiyur POCSO Case
Selaiyur POCSO Case
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக 25 வயது வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி, தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். மாணவியின் தந்தை ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், அவரது தாய் தனியார் மருத்துவமனை ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாணவியின் தாய் பணிக்கு சென்றிருந்தார். எனவே வீட்டில் மாணவியும் அவரது தம்பியும் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, பதுவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆனந்தராஜ் என்பவர் மாணவியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு அடிக்கடி மீன்பிடிக்க வருபவர் என தெரிகிறது. சிறுமியின் வீட்டிற்கு சென்ற ஆனந்தராஜ், மாணவியின் தம்பியை டீ வாங்கி வருமாறு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் மாணவி தனியாக இருந்த நிலையில், அவரிடம் தவறாக நடக்க அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறி சத்தம் போட்டுள்ளார்.

மாணவியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு திரண்டு வந்துள்ளனர். பின்னர் இளைஞரை பிடித்து சேலையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆனந்தராஜை சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தவிர்க்க ஆனந்தராஜை மறைத்து அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆனந்தராஜை மருத்துவப் பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர், ஆனந்தராஜை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். தாய் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம் வாலிபர் அத்துமீறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com