க்ரைம்

“கோழி வியாபாரியை கொன்று நிலத்தில் புதைத்த வாலிபர்” - 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை… நள்ளிரவில் ஏற்பட்ட தகராறின் அதிர்ச்சி பின்னணி!

ஏழுமலை, சக்திவேல் மற்றும் ஏழுமலையின் மனைவி சக்தி ஆகிய மூவரும் சேர்ந்து, அங்கேயே பள்ளம் தோண்டி...

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், திருச்சூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய சங்கர். இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நாட்டுக் கோழிகளை வாங்கி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த (மார்ச் 11) ஆம் தேதி தர்மபுரிக்கு கோழி வாங்க சென்ற சங்கர் அங்கு கோழி வாங்கிக் கொண்டு தனது டிவிஎஸ் 50 வாகனத்தில் மீண்டும் ஊர் திரும்பும் போது, போளூர் அடுத்த கொம்மனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது போளூர் அருகே அலங்காரமங்கலம் குசால் பேட்டை பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் 21 வயதுடைய சக்திவேல், சங்கரிடம் நாட்டுக்கோழி குஞ்சுகளின் விலை கேட்டார்.

தொடர்ந்து மொத்த கோழிகளையும் தானே வாங்கிக் கொள்வதாக கூறி, சங்கரை சோத்துக்கண்ணி மலை மேட்டு பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பம்பு செட்டில் தங்கி மது அருந்திய நிலையில் இரவு சுமார் 12 மணி அளவில், பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், அருகில் இருந்த கொடுவாளால் சங்கரின் காலில் வெட்டினார். இதில் கால் துண்டாகி சங்கர் அலறிய நிலையில் சக்திவேல் அங்கு இருந்த கட்டையால் மீண்டும் அவரை தாக்கி கொலை செய்திருக்கிறார்.

இதையடுத்து, சங்கர் இறந்ததை சக்திவேல் தனது தந்தை ஏழுமலையிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஏழுமலை, சக்திவேல் மற்றும் ஏழுமலையின் மனைவி சக்தி ஆகிய மூவரும் சேர்ந்து, அங்கேயே பள்ளம் தோண்டி சங்கரின் உடலை புதைத்தனர். அதோடு சங்கரிடம் வாங்கிய கோழிக்குஞ்சுகளையும் நிலத்தின் ஒரு பகுதியில் புதைத்து, மற்றொரு பகுதியில் அவரது டிவிஎஸ் 50 வாகனத்தையும் புதைத்து ஆதாரங்களை அழித்தனர். இதற்கிடையில், கோழி வாங்கச் சென்ற சங்கர் திரும்பி வராததால், அவரது குடும்பத்தினர் சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையத்தில் சங்கரை காணவில்லை என புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சங்கரின் செல்போன் சிக்னல் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் சோத்துக்கண்ணி பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் போளூர் காவல் நிலைய போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு போளூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கர், கலசபாக்கம் இன்ஸ்பெக்டர் சஞ்சீவிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது, அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது, கோழி வியாபாரியுடன் சண்டை நடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அலங்காரமங்கலம் குசால் பேட்டை பகுதியில் உள்ள சக்திவேல் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு இருந்த தந்தை ஏழுமலை மற்றும் தாயார் சக்தி இடம் வேறு காரணத்திற்காக வந்தது போல் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவன்–மனைவி இருவரும், “போலீசாருக்கு தெரிந்து விட்டதோ?” என பேசிக்கொண்டதையும், “அதெல்லாம் கண்டுபிடிக்க முடியாது” என ஏழுமலை கூறியதையும் காவலர் சரவணன் கவனித்து அவரது வீட்டிற்கு அருகிலேயே மறைந்து இருந்து, சக்திவேல் வீட்டிற்கு வந்ததும், மூவரையும் ஒரே அறையில் வைத்து பூட்டி, மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் கேட்ட சங்கரை சக்திவேல் கொடுவாளால் வெட்டி, கட்டையால் தாக்கி கொலை செய்து, உடலை புதைத்தது ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து, நேற்று சம்பவ இடத்தில் தாசில்தார் பாலாஜி, கிராம நிர்வாக அதிகாரி பிரவீன் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில், டாக்டர் சுகன்யா தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், கொலையில் ஈடுபட்ட தந்தை ஏழுமலை, தாய் சக்தி மற்றும் மகன் சக்திவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோழி வியாபாரியை கொன்று நிலத்தில் புதைத்து வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.