க்ரைம்

“8-ம் வகுப்பு மாணவனை.. வகுப்பறைக்குள் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை” - சக மாணவர்கள் 9 பேர் கைது! தூத்துக்குடியில் பரபரப்பு?

கடந்த ஆண்டு முதலே ஒன்பது மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது

Muthu Lakshmi

தூத்துக்குடி அருகே விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். வகுப்பறைக்குள் நிர்வாணமாக்கி நிற்க வைத்து ரப்பர் பேண்ட், ஸ்கேல் உள்ளிட்டவற்றால் அவரது பிறப்புறுப்பில் அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியும் பபுள்கம் ஒட்டியும் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

இதனை வெளியில் சொன்னால், மேலும் துன்புறுத்துவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர் யாரிடமும் கூறாமல் பயந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டும்  வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிலைமையை அறிந்த அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயை அழைத்து சம்பவத்தை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து, தன் மகனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கண்டிக்கும்படி புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் தலைமை ஆசிரியரோ, “இதை பெரிது படுத்த வேண்டாம். மாணவனுக்கு உடல்நிலை சரியாகும் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என தெரிவித்தாராம். இதனால் மனவேதனையும் விரக்தியும் அடைந்த அந்த மாணவனின் தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவனை கடந்த ஆண்டு முதலே ஒன்பது மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து BNS மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் விளாத்திகுளம் வட்டாரத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் துன்புறுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக குழந்தைகள் நலக்குழு மூலம் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால் விரிவான அறிக்கை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தை மூடி மறைக்கும் விதத்தில் செயல்பட்ட  ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளியில் படிக்கும் மாணவனை மாணவர்களே பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஈடுபடுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.