

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தில், கணவன் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினரிடம் கூறப்பட்ட சம்பவம், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை வழக்காக மாறிய இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் அவரது மைத்துனரும் காவல்துறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 35 வயதான சுமித் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு 112 அவசர உதவி எண்ணின் மூலம் தகவல் கிடைத்தது.
தகவலாய் அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சுமித்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை காவல்துறையின் சந்தேகத்தை உறுதி செய்தது. சுமித்தின் மரணம் தற்கொலை அல்ல, அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலை எனக் கூறப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டதுடன், தொழில்நுட்ப ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன.
விசாரணையில் சுமித்தின் மனைவி காஜல் (30) மற்றும் அவரது மைத்துனர் உமேஷ் (30) ஆகியோருக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரின் நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.
போலீசாரின் கூற்றுப்படி, காஜலும் உமேஷும் தங்களது உறவைத் தொடர்வதற்காகவும், சுமித்தின் சொத்துகளை கைப்பற்றும் நோக்கத்திலும் அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்ததுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் சுமித்தை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பின்னர் அவரது உடலை கயிற்றில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் பிம்பத்தை உருவாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலைக்குப் பிறகு சுமித் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். ஆனால், பிரேதப் பரிசோதனை முடிவுகள் அவர்களின் வாக்குமூலம் முற்றிலும் மாறாக இருந்ததால், விசாரணையின் கோணம் மாறியது.
மேலும், சுமித்தின் மனைவி காஜல் மற்றும் உமேஷின் தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டபோது, குற்றத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சுமித் மற்றும் காஜலுக்கு திருமணமாகி சுமார் மூன்று ஆண்டுகள் ஆனதாகவும், இவர்களுக்கு இரண்டு வயது குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கில் காஜல் மற்றும் உமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம், சொத்து தொடர்பான விவகாரம் மற்றும் சம்பவத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலந்தஷார் நகர காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கிடைத்த தகவல்கள் மூலம் சுமித் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணையில் அவரது மனைவிக்கும் மைத்துனருக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு மற்றும் சொத்து தொடர்பான நோக்கம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், விசாரணை முடிவடைந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.