Thoothukudi Schoolgirl Murder 
க்ரைம்

“11 ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி கொலை” - வீடு புகுந்து காதலன் வெறிச்செயல்.. வேறு ஒருவருடன் பழகியதுதான் காரணமா?

இந்த நிலையில், அபர்ணா மற்றொரு நபருடன் பேசுவதாக முத்துராஜா சந்தேகமடைந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே 11-ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் இளைஞர், தற்கொலைக்கு முயன்ற நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரம், வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா.

இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் நீண்ட நேரம் போன் பேசுவது அடிக்கடி வெளியில் சந்தித்துக் கொள்வது என காதலித்து வந்துள்ளனர்.

எனவே இருவரின் காதல் விவகாரமும் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவியின் படிப்பு முடிந்த பிறகு திருமணம் தொடர்பாகப் பேசிக்கொள்ளலாம் என இரு தரப்பினரும் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அபர்ணா மற்றொரு நபருடன் பேசுவதாக முத்துராஜா சந்தேகமடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், இன்று(நவ 21) மதியம் அபர்ணாவின் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அபர்ணாவைக் கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் முத்துராஜா கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், தானும் கூர்மையான ஆயுதத்தால் உடலில் காயங்களை ஏற்படுத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காயமடைந்த முத்துராஜாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மாணவி அபர்ணாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டதற்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.