Tiruchengode Wife Murder Case 
க்ரைம்

மனைவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு டாஸ்மாக் சென்ற கணவன்.. ‘காலி இடத்தில் கிடந்த சடலம்’ - ஆடு மேய்த்தவர்களால் வெளிவந்த உண்மை!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரசிகாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்...

Mahalakshmi Somasundaram

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சின்னபாலத்து தெருவைச் சேர்ந்தவர் 26 வயதுடைய கணேசன். லாரி மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவருக்கும், 21 வயதுடைய ரசிகா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணேசனுக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கணவரைப் பிரிந்த ரசிகா, அதே தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ரசிகா தனது பெரியப்பா மகன் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காகக் கணேசனுடன் சென்றுள்ளார். அப்போது இருவரும் சமாதானமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வசித்து வந்த வீட்டில் பாம்புத் தொல்லை இருப்பதாகவும், வேறு வீட்டிற்குச் செல்லலாம் என்றும் கணேசன் கூறியுள்ளார். இதற்காக ஒரு வீட்டில் ரூ.5,000 முன்பணமாகக் கொடுத்திருந்ததாகவும், மேலும் ரூ.10,000 கொடுக்க வேண்டியிருந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே, அந்தப் பணத்தை வாங்குவதற்காக நேற்று(நவ 16) காலை 10.30 மணியளவில் ரசிகாவைக் கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதன்பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திருச்செங்கோடம்பாளையம், சண்முகபுரம் களரங்காடு சாலைப் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி ஆலையின் பின்புறம், குமரன் கோவில் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத காலி இடத்தில் ரசிகா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது கழுத்து, மார்பு, தொடை, முதுகு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன. மாலையில் அந்தப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, திருச்செங்கோடு ஊரகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரசிகாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

திருச்செங்கோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினியும் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இதற்கிடையே, ரசிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற கணேசனின் செல்போன் அணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை நடத்திய போது திருச்செங்கோடு அருகே உள்ள கலரங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவி ரசிகாவை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் அங்கிருந்து தப்பிய கணேசன் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியதாகவும், மது அருந்தி விட்டு கணேசன் திடீரென தான் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது உடலில் பல்வேறு பகுதிகளில் குத்தி தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கணேசன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் திருச்செங்கோடு போலீசார் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.