“பெண்ணை லாட்ஜுக்கு அழைத்த தவெக நிர்வாகி” - பாருக்கு சென்ற இடத்தில் நடந்த அத்துமீறல்.. சிசிடிவி மூலம் சிக்கிய பின்னணி!

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்...
Chennai Restro Bar Woman Harassment Case
Chennai Restro Bar Woman Harassment Case
Published on: 
Updated on: 
1 min read

சென்னையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், அரும்பாக்கத்தில் உள்ள ரெஸ்ட்ரோ பாரில் கடந்த ஓராண்டாக பில்லிங் கேஷியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த (நவ 9) ஆம் தேதி அந்தப் பெண் தனது இருசக்கர வாகனத்தைத் தரைதளத்தில் நிறுத்தச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவரும், லாட்ஜுக்கு வருமாறு வற்புறுத்தியதுடன் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரும் மற்றொருவருக்கு உடந்தையாக இருந்து, அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பாலாஜி மற்றும் பிரபு குமார் ஆகிய இருவரையும் போலீசார் அடையாளம் கண்டு இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரபு குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் அண்ணா நகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பாலாஜி அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் தொல்லை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பிரபு குமாரை கட்சியில் இருந்து நீக்கி தமிழக வெற்றிக் கழகத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவர் கடந்த (நவ 5) ஆம் தேதியே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ரெஸ்ட்ரோ பார் பெண் ஊழியரிடம் பாலியல் தொல்லை அளித்ததாக தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.