திருநெல்வேலியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபரை மற்றொரு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மனகாவலம் பிள்ளை நகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டேவிட் என்பவரது மகன் 35 வயதுடைய சாம் சாலமன் பிரபாகர் டேவிட். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாந்தி நகர் செல்லும் சாலையில் இருந்து வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர், ஆள் நடமாட்டம் உள்ள சாலையிலேயே சாம் சாலமனை வழிமறித்து, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சாம் சாலமன் பிரபாகர் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை நடந்த பகுதியைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதில், உயிரிழந்த சாம் சாலமன் பிரபாகர் டேவிட் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் சாலையில், இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று ஒருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பியோடிய இரண்டு மர்ம நபர்களையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.