“முகம் சிதைத்து கொல்லப்பட்ட ரவுடி” - நள்ளிரவில் நண்பர்களுக்கு ஏற்பட்ட மோதல்.. வெளிவருமா கொலைக்கான பின்னணி?

சூர்யாவின் நண்பர்கள் எனக் கூறப்படும் சிலர் கம்பு கட்டைகளால் அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது...
Madurai Rowdy Murder
Madurai Rowdy Murder
Published on: 
Updated on: 
1 min read

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பிரபல ரவுடி கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சமயநல்லூர் சடச்சியம்மன் நகரைச் சேர்ந்த 'குட்டிசாக்கு' என்ற சூர்யா என்பவரே கொலை செய்யப்பட்டவர். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பிலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று(நவ 01) இரவு சமயநல்லூர் பகுதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சூர்யா தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது முற்றிய நிலையில், சூர்யாவின் நண்பர்கள் எனக் கூறப்படும் சிலர் கம்பு கட்டைகளால் அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சூர்யா முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சூர்யா மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்ததற்கான தகவல் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த (அக் 26) ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூர்யாவுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், அதன்பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூர்யாவுடன் இருந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கொலையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்