க்ரைம்

“எனக்கு வண்டி வாங்கி தாங்க” - 14 இடங்களில் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட தந்தை.. தாயையும் விட்டு வைக்காத கொடூர மகன்!

இதனால் பயந்து போன ஆதிமூலம் மற்றும் வெங்கடேஸ்வரி கசிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு..

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம்,கந்திலி அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 64 வயதான ஆதிமூலம், இவருடைய மனைவி 54 வயதான  வெங்கடேஸ்வரி இவர்களுக்கு வெற்றிச்செல்வன் மற்றும் கோமதி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் வெற்றி செல்வன் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது தந்தையான ஆதி மூலம் நடத்தி வந்த டைலர் கடைக்குச் சென்ற வெற்றிச்செல்வன் திரும்பவும் வீட்டை விற்று பணம் தருமாறும் இல்லையெனில் இருசக்கர வாகனம் கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், தாய் வெங்கடேஷ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்த கத்தரிக்கோலை கொண்டு 14 இடங்களில் சரமாரியாக கொடூரமாக குத்தி விட்டு  அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனால் பயந்து போன ஆதிமூலம் மற்றும் வெங்கடேஸ்வரி  கசிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு  திருப்பத்தூர் நகர் பாவுசா நகரில் உள்ள மற்றொரு சொந்தமான வீட்டில் குடியேறி  வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெற்றிச்செல்வன் தனது அம்மாவை பார்க்க வந்துள்ளார். அப்போது திரும்பவும் சொத்து காரணமாக  தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இங்கிருந்தால் பிரச்சனை ஏற்படும் என நினைத்து ஆதிமூலம் அங்கிருந்து கசிநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெற்றிச்செல்வன் தன்  தாய் வெங்கடேஸ்வரியிடம் “எனக்கு வண்டி வாங்கி தாங்க” வாக்குவாதம் செய்து இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை ஆதிமூலம் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது  மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து எஸ்பி சியாமளாதேவி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார் மேலும் அவருடைய தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய வெற்றி செல்வனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்துக்காக மகனே தந்தையை ஏற்கனவே குத்தி கொலை செய்ய முயன்ற நிலையில் தற்போது தாயைக் கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.