“வைரமுத்துவை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” - 10 வருட காதல்.. நள்ளிரவில் தலைத்தெறிக்க ஓடிய டூவீலர் மெக்கானிக்!
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு 28 வயதில் வைரமுத்து என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதியில் பெரியகுளம் அருகே உள்ள பக்கத்து தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் 26 வயது மகள் மாலினி என்பவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மாலினி தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். வைரமுத்துவின் வீட்டில் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் மாலினியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
எனவே காதல் விவகாரம் குறித்து ஊருக்குள் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் மாலினியை அவரது சகோதரர் அடித்ததாக சொல்லப்படுகிறது இதனால் வைரமுத்து மாலினியின் சகோதரரிடம் வாக்குவாதம் செய்து மாலினியை அடிக்க கூடாது என கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாலினியின் தயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது விசாரணையில் மாலினி “நான் வைரமுத்துவைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மாலினியின் குடும்பத்தினர் தங்களுக்கு மாலினி வேண்டாம் என கூறியுள்ளனர். எனவே மாலினியை வைரமுத்துவின் குடும்பத்தினர் அழைத்து சென்று அவர்களது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வைரமுத்துவிற்கும் –மாலினிக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைக்க வைரமுத்துவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். எனவே மாலினி நேற்று வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற வைரமுத்துவை வழி மறித்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் உயிருக்கு போராடிய வைரமுத்துவை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு வைரமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு 30 க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மகனை காதலியின் குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாலினியின் தாய் டூவீலர் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று வைரமுத்துவிடம் வாக்குவாதம் செய்யும் போது “அப்பவே உன்னை தட்டியிருக்க வேண்டும்” என்று மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவை வைரமுத்துவின் குடும்பத்தினர் ஆதாரமாக காவல்துறையில் வழங்கியுள்ளனர். காதலி குடும்பத்தினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.