Tirupattur Youth Murder Case 
க்ரைம்

“என் அப்பாவிடம் ஏன் தகராறு செய்தீர்கள்?” - இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறு.. அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!

இறுதி சடங்கில் கலந்து கொண்ட இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் அருகே இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன்விரோதத் தகராறு மோதலாக மாறியதில், இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கத்திக்குத்தில் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு சின்னதம்பி என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் வந்துள்ளார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சர்வேசன் என்பவரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சம்பாதிக்கும் சர்வேசனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுபானக்கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சந்தனம் செய்து அனுப்பிவைத்த நிலையில் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இறுதி சடங்கில் கலந்து கொண்ட இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பத்தின் மகன்களான ஆனந்தராஜ், அருண் மற்றும் அவரது அண்ணன் மகன் விஷ்ணு ஆகிய மூவரும் சர்வேசனிடம் சென்று, தங்களது தந்தையிடம் ஏன் தகராறு செய்தீர்கள் எனக் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் சர்வேசன், அவரது சகோதரர் தேவராஜ் மற்றும் தேவராஜின் மகன் திலீப்குமார் ஆகியோர் ஒரு தரப்பாகவும், ஆனந்தராஜ், அருண் மற்றும் விஷ்ணு ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இரு தரப்பினரும் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் விஷ்ணுவின் தலையில் கத்தியால் வெட்டப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருணுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல், ஆனந்தராஜ் இரும்பு ராடால் தாக்கப்பட்டதில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆனந்தராஜ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு ஆனந்தராஜைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விஷ்ணுவுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த ஆனந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சர்வேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தேவராஜ் மற்றும் அவரது மகன் திலீப்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன்விரோதத் தகராறு மோதலாக மாறி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொடுமாம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.