“பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி” - பேய் ஓட்டுவதாக கூறி அத்துமீறல்.. 10 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி கொடுத்த தீர்ப்பு!

இதனை நம்பி அவரிடம் சென்ற பெண்ணைத் தனிமைப்படுத்திய ராஜேஷ், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்...
Kerala Temple Priest Case
Kerala Temple Priest Case
Published on: 
Updated on: 
1 min read

கேரளாவில் பேய் ஓட்டுவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பூசாரிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. திருவனந்தபுரம் மாவட்டம் ஆழப்புழா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நாட்களாக தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர்க்கலா பகுதியில் அமைந்துள்ள ஆயுரூர் இடவ ஸ்ரீ வனமூர்த்தி பத்ரா தேவி கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பூசாரியாக பணியாற்றி வந்த மேக்குளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உடலில் பேய் இருப்பதாகவும், அதனை விரட்டுவதற்குச் சிறப்பு சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் சென்ற பெண்ணைத் தனிமைப்படுத்திய ராஜேஷ், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவத்தை வெளியே கூறக்கூடாது எனப் பலமுறை மிரட்டி, அப்பெண்ணைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பூசாரியின் தொடர் மிரட்டல்களையும் துன்புறுத்தல்களையும் தாங்க முடியாத அந்தப் பெண்,கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ. ஷாஜஹான், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் ராஜேஷைக் குற்றவாளி என அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.