போலி சாமியார் கூறியதை நம்பி வைத்தியம் பார்க்க அழைத்து வந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி இரண்டாவது திருமணம் செய்த சாமியார். மகளை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த உமையப்ப நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது பெண் பிள்ளையான காயத்ரிக்கு (19) க்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திடீரென சுயநினைவு இல்லாமல் கை கால் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து அக்கம் பக்கத்தினர் கூறியதை நம்பி ரமேஷ் மற்றும் கவிதா தனது மகளை ஆலங்காயம் அடுத்த கல்லரப்பட்டி, கோமலேரி கொட்டாய் பகுதியில் வனத்துறையை ஒட்டியுள்ள, ஒரு மகா காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அந்த கோவிலில் உள்ள சாமியார் சுப்பிரமணியன் இதற்கு வைத்தியத்திம் செய்வதாக கேள்விப்பட்டு அங்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சாமியார் சுப்பிரமணியன், அவர்கள் மகளுக்கு பேய், பில்லி, சூனியம் செய்து வைத்திருப்பதாகவும் அதற்கு ஆடு கோழி உள்ளிட்ட உயிர்களை பலி கொடுத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் எனவும் சொல்லியுள்ளார். அதே போல் கோயிலில் இரண்டு வாரம் தங்கி வைத்தியம் பார்த்து செல்ல வேண்டும் எனவும் சாமியார் சொல்லியுள்ளார். மகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோரும் அதை நம்பி சம்மதித்துள்ளனர். ஆனால் இரண்டு வாரம் ஆகியும் தனது மகளின் உடல்நிலை சரியாகாததால் காயத்திரியை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து குணப்படுத்தி உள்ளனர். பின்னர் நல்ல நிலைக்கு திரும்பிய மகளை கடந்த இரண்டு ஆண்டாக வாணியம்பாடி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வரும் நிலையில் NMH மருத்துவமனையில் பகுதிநேர பயிற்சியும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22 ந்தேதி பயிற்சி முடித்துவிட்டு, மாலை அரசு பேருந்தில் வீட்டிற்கு வருவதாக காயத்ரி பெற்றோரிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் மகள் வராததால் பல இடங்களில் தேடி வந்த பெற்றோருக்கு இரவு 7.30 மணிக்கு சாமியார் சுப்பிரமானியன் என்பவரிடம் இருந்து காயத்ரியின் தந்தை செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் “உங்க பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன்” எனவும் “நாங்கள் இருவரும் திருப்பதிக்கு போகிறோம்” என்றும் கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிவந்துள்ளனர். சாமியார் சுப்பிரமணியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து கல்லரபட்டி அடுத்த கல்கட்டு பகுதியில் பழனி என்பவரின் வீட்டின் முன் சாமியார் சுப்பிரமணியின் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருப்பதாக கேள்வி பட்டு அங்கு சென்றுள்ளனர். அங்கு சுப்பிரமணியன் குறித்து கேட்டபோது பழனி மற்றும் அவரது மகன் சக்கரவர்த்தி ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி ரமேஷ், தாய் கவிதா மற்றும் உறவினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர்கள் ஆலங்காயம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு, பின்னர் சாமியார் சுப்ரமணியனை தேடி சென்றுள்ளனர்.
சாமியார் தங்கியிருந்த காளியம்மன் கோயில் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று சுப்பிரமணியன் குறித்து அவரது மனைவி உறவினர்களிடம் கேட்டபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதில் சாமியார் சுப்பிரமணியின் மனைவி கனவில் ‘காயத்ரியை தனது கணவர் திருமணம் செய்து கொண்டால் தான் உயிரோடு இருப்போம்” எனவும் “இல்லையெனில் குடும்பத்துடன் காவு வாங்கிவிடும் “என கனவில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். “அதனால் தான் நாங்களே காயத்ரியை தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்தோம்” எனக் கூறியுள்ளார் சாமியாரின் மனைவி. இதனால் ஆத்திரம் அடைந்த காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கீதா தனது மகளை வைத்தியத்திற்காக அழைத்துச் சென்ற சாமியார் “ஆசை வார்த்தை கூறி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் இவர் ஏற்கனவே அந்தப் பகுதியில் உள்ள பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாகவும் அவரிடமிருந்து தனது மகளை மீட்டுத் தருமாறு” ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்