Tiruppur Student Suicide 
க்ரைம்

“அப்பா போன இடத்துக்கே நானும் போறேன்” - தந்தையை போலவே ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த மகள்.. குடும்பத்தை இழந்து கதறும் தாய்!

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...

Mahalakshmi Somasundaram

திருப்பூர் அருகே, ரயில் மோதி தந்தை உயிரிழந்த அதே இடத்தில் 16 வயது மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த மாணவி, அவர் உயிரிழந்த இடத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜானகி, மங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு 16 வயதில் சாதனாஎன்ற ஒரே மகள் இருந்தார்.

சாதனா தனது தாய் பணியாற்றிய அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த ஒரே மகள் என்பதால், கார்த்திக்கும் ஜானகியும் சாதனாவை மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். குறிப்பாக, தந்தை கார்த்திக் மீது சாதனா மிகுந்த பாசம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மகள் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்து, எந்தக் குறையும் இல்லாமல் கார்த்திக் வளர்த்து வந்துள்ளார். இவர்களது வீட்டிலிருந்து பள்ளி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. இதனால், சாதனா தினமும் வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.

தினமும் காலையில் தந்தை கார்த்திக், மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, தண்டவாளத்தைக் கடக்க உதவி செய்து பாதுகாப்பாக அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு கார்த்திக் வீடு திரும்பியுள்ளார். அப்போது, ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணம் சாதனாவை மிகவும் பாதித்துள்ளது.

தந்தையில் இழப்பில் இருந்து மீள முடியாமல் சாதனா தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதும் கலகலப்பாக இருந்த சாதனா, தந்தையின் மறைவுக்குப் பிறகு அமைதியாக மாறியுள்ளார். பள்ளியில் சக மாணவிகளிடம் தனது தந்தையின் பாசம் குறித்தும், அவருடன் கழித்த நினைவுகள் குறித்தும் அடிக்கடி உருக்கமாகப் பேசி வந்துள்ளார். மேலும், “அப்பா இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று கூறி கண் கலங்கியதாகவும் தெரிகிறது.

சக மாணவிகளும் ஆசிரியைகளும் அவருக்கு ஆறுதல் கூறியபோதிலும், தந்தையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த (நவ 18) ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட சாதனா, தனது தந்தை கார்த்திக் ரயில் மோதி உயிரிழந்த அதே இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது, டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக வந்துள்ளது. அப்போது மாணவி சாதனா திடீரென ரயில் முன் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு கணவரை ரயில் விபத்தில் பறிகொடுத்த ஜானகி, தற்போது தனது ஒரே மகளையும் அதே இடத்தில் இழந்துள்ளார். மகளின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.