கோவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு காரணமாக பள்ளியில் சாதி ரீதியான துன்புறுத்தலே காரணம் என மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் - கௌசல்யா தம்பதி. இவர்களது இளைய மகன் அகிலன் (15) பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடித்து விட்டு அகிலன் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பியுள்ளார். அதே போல் தாய் கௌசல்யா அருகே வீட்டு வேலைக்கும், அக்கா பள்ளிக்கு சென்றுள்ளனர். தந்தை அசோக்குமார் கேரளா மாநிலம் மூணாறில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன் கிழமை கௌசல்யா மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்தபோது பூட்டப்பட்ட வீடு திறந்து இருப்பது தெரியவந்துள்ளது.
அப்போது உள்ளே சென்று அகிலனின் தாய் பார்த்தபோது அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகிலன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே உயிரிழந்த மாணவனின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் பள்ளி வகுப்பறையில் 'ஸ்காலர்ஷிப்' தொடர்பான தகவல்களை கேட்கும் பொழுது, மாணவரின் சாதி குறித்தும், மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்தும் ஆசிரியர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக அகிலன் "ஆம்" என பதிலளித்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். பின்னர், இதனை அறிந்த பிற மாணவர்கள் அகிலனுடன் பேசுவதில்லை எனவும், மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததாகவும், சாதியின் பெயரை கூறி திட்டியதாகவும், தாக்கியதாகவும் அவர் வீட்டில் கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் மாணவன் அகிலன் வருத்தத்தில் இருந்துள்ளார் எனவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேட்டி அளித்த மாணவனின் தந்தை அசோக் குமார், அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகனின் அடையாளம் குறித்து தெரிந்த பின்னர், சக மாணவர்கள் பேசுவதை தவிர்த்ததாகவும், இது குறித்து அவர் பள்ளியில் முறையிட்ட பொழுது, "அப்படி எதுவும் இல்லை நாங்கள் விசாரிக்கிறோம்" என பள்ளியில் கூறியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தனது மகன் அகிலன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், தற்கொலைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் மாணவரின் உடலை பெற மாட்டோம் எனவும் அகிலனின் தந்தை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மேலும், அகிலனின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அகிலன் தந்தை தன மகனின் தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் வகுப்பில் உள்ள இரண்டு மாணவர்களே காரணம் எனவும் புகாரளித்துள்ளார். இந்நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் அகிலனின் தற்கொலை விவகாரத்தில் பள்ளி ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் பள்ளி மாணவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீளமேடு போலிசார் தற்கொலைக்கு தூண்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்தல், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகனைக் காப்பாற்றியிருக்க முடியுமோ என்ற எண்ணம் தனக்கு இருப்பதாகக் கூறிய அசோக்குமார் (தந்தை), பள்ளியில் சாதி ரீதியான பிரச்சினைகள் இனியும் நடைபெறக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உடற்கூறாய்வு தொடர்பான ஆவணங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தனது மகனின் மரணத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை அதிகாரியின் செயல்பாடுகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அசோக்குமார், காவல்துறையினர் தெரிவிக்கும் தகவல்களைத் தனது வாயிலாக ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி செய்வதாக தான் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது குறித்து கேள்வி எழுப்பியபோது, விசாரணையின் முடிவில்தான் கைது நடவடிக்கை குறித்து முடிவு செய்ய முடியும்" எனக் காவல்துறையினர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் மாணவனின் தந்தை அசோக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தனது மகனை இழந்துவிட்ட நிலையில், இனி வேறு எந்த மாணவருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது, என்பதற்காகவே போராடுவதாக அசோக்குமார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “என் மகன் மீண்டும் உயிருடன் வரப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். அவன் திரும்பி வர வேண்டும் என்பதற்காக நான் போராடவில்லை. இனி வேறு எந்த மாணவருக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் சாதியின் பெயரால் மாணவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு” என்று உருக்கமாக பேசியுள்ளார். இதற்கிடையே, மாணவர் அகிலன் உயிரிழப்பு தொடர்பாக அவரது பெற்றோருடன் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
"சாதி எல்லாம் இப்போ யாருங்க பாக்குறா?" என்ற கேள்விகளை இப்போது அதிகமாக நாம் கேட்கலாம். ஆனால், 2026ல் கூட இதுபோன்ற சாதிய பாகுபாடுகள் நாட்டின் மூலைமூடுக்குகளில் கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை என்று பலராலும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.