Balasubramaniam Kills Wife Malar 
க்ரைம்

“மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவன்” - கஞ்சா போதையில் தலைக்கேறிய வெறி.. பதுங்கிய பாலசுப்ரமணியன் எங்கே?

மலர் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார்...

Mahalakshmi Somasundaram

திருப்பூரில் குடிபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளையன் என்கிற 45 வயதுடைய பாலசுப்ரமணியம். இவரது மனைவி 40 வயதுடைய மலர். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் தட்டான் தோட்டம் முதல் வீதியில் வசித்து வருகின்றனர். பாலசுப்ரமணியம் திருப்பூர் பூ மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே, பாலசுப்ரமணியத்துக்கு மது அருந்தும் பழக்கமும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, மலர் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார். இதையடுத்து, பாலசுப்ரமணியம் இனிமேல் மது மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன் என்றும், திருந்தி வாழ்வதாகவும் பாலசுப்ரமணியம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை நம்பிய மலர் மீண்டும் கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே பாலசுப்ரமணியம் மீண்டும் மது மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (நவ 14) ஆம் தேதி மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பாலசுப்ரமணியம் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மனைவி மலருடன் தகராறில் ஈடுபட்டதுடன், அவரது தாயாருடனும் வாக்குவாதம் செய்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகத் தெரிகிறது.

Balasubramaniam Kills Wife Malar

இதனால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியம், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மலரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததைக் கண்ட பாலசுப்ரமணியம் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டதுடன், கைரேகை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர்.

பின்னர் மலரின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் ஆகாஷ் ஜோஷி, தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பாலசுப்ரமணியத்தைத் தேடி வருகின்றனர். குடிப்பழக்கம் காரணமாகத் தொடர்ந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.