க்ரைம்

“எதுக்கு உனக்கு இவ்வளவு பூ… தேவையா” - திருமணமான மூன்று மாதத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழப்பு.. சைக்கோ கணவனால் நடந்த விபரீதம்!

இதனால் கடந்த 15 தினங்களாக ஷோபியா தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

திருப்பூர் அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் இவரது மகன் விகாஸ் கண்ணன். சிறிய அளவில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் திருப்பூர் கன்னங்காடு பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவரது மகள் 19 வயதுடைய ஷோபியா என்பவருக்கும் கடந்த ஆண்டு (டிச 1) ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.விகாஸ் கண்ணனுக்கு நீண்ட நாட்கள் பெண் பார்த்து எங்கும் அவரது சமுதாயத்தில் பெண் கிடைக்காததால் மாற்று சமுதாயத்தில் இருந்து ஷோபியாவை திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

ஷோபியா திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படிக்க வேண்டும் என கேட்ட நிலையில் திருமணத்திற்கு முன்பு அவர் படிப்பை தொடர கணவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 15 தினங்களாக ஷோபியா தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அப்போது அவரை கட்டாயப்படுத்தி கணவன் விகாஸ் கண்ணன் தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் ஷோபியாவிற்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே குழந்தைக்காக ஷோபியாவை கணவன் விகாஸ் கண்ணன் இனிமேல் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனை கேட்காமல் நேற்று முன்தினம் ஷோபியா கல்லூரிக்கு சென்றிருக்கிறார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் ஷோபியா கல்லூரியிலிருந்து வீடு திரும்பியவுடன் கணவன், மனைவிக்கு இடையே கல்லூரியில் படிப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஷோபியா “நான் தொடர்ந்து படிக்கத்தான் செய்வேன்” என கூறிக் கொண்டு தனது அறைக்கு சென்று உள்ளே பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கணவன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோது அங்கு ஷோபியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணமாகி மூன்று மாதங்களே ஆனதால் இளம்பெண் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடைய திருப்பூர் அரசு மருத்துவமனையில் குவித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் பெண்ணின் கணவர் விட்டார் மருத்துவமனைக்கு வரவில்லை எனவும் அவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய விசாரணை செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பெண்ணின் குடும்பத்தினர் “ஷோபியாவின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் வீட்டார் தான் எனவும் பலமுறை அவர்கள் தொல்லை செய்ததாகவும் அந்த வீட்டில் இருக்க பயமாக இருக்கிறது உணவு ஷோபியா குறித்து தெரிவித்தனர். மேலும் ஷோபியா கல்லூரிக்கு சென்ற போது “எதுக்கு பூ வச்சுட்டு போற இவ்வளவு பூ தேவைதானா” என கேட்டு அவரது கணவர் டார்ச்சர் செய்ததாகவும் விகாஸ் கண்ணன் ஒரு சைக்கோ போல் நடந்து கொள்வர் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.