“ஏழு பேரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்” - நள்ளிரவில் கேட்ட மரண ஓலம்… நெல்லையில் நடந்த இரட்டை கொலையால் பரபரப்பு!

மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில்...
“ஏழு பேரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்” - நள்ளிரவில் கேட்ட மரண ஓலம்… நெல்லையில் நடந்த இரட்டை கொலையால் பரபரப்பு!
Admin
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்குள்ள ஒரு டீ கடை முன்பு சிலர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் வந்து, திடீரென பெட்ரோல் குண்டை வீசியது. பின்னர் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை கொடூரமாக அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். மேலும் மர்மகும்பல் அருகில் உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்திலும் புகுந்து அங்கிருந்த சிலரையும் வெட்டிவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விட்டு தப்பிச் சென்றது.

இந்த திடீர் தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான 45 வயதுடைய ஜான் மார்க் மற்றும் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 30 வயதுடைய மதிக்கத்தக்க கூலி தொழிலாளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த நெல்சன்(45), பிரபாகரன், ராமசாமி, வீராங்குளத்தை சேர்ந்த கணேசன்(58), புளியங்குளத்தை சேர்ந்த சசிகுமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இரண்டு நபர்களின் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்து நெல்சன், கணேசன் ஆகிய 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் மற்றும் போலீசார் இரவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Admin

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் கஞ்சா, மது போதையில் வெறியாட்டம் ஆடினார்களா? அல்லது திட்டமிட்டு இச்சம்பவத்தை நிகழ்த்தினார்களா? அல்லது ஏதேனும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தப்பிச் சென்ற மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர சம்பவத்தால் நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பெரும்பத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவை மூலமாக போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகப்படும்படியான 2 நபர்களை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது மேலும் ஆறு பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com