Palladam Woman Suicide Attempt 
க்ரைம்

“எவன் கூட தொடர்பில் இருக்க” - மரண படுக்கையில் பெண் கொடுத்த வாக்குமூலம்.. குடும்பமே சேர்ந்து கொடுமை படுத்தியது ஏன்?

தாய் சாந்தாமணி மற்றும் தம்பி கார்த்தி ஆகியோர் நிர்மலாவை திட்டியதுடன் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்ததாகக் கூறப்படும் மன உளைச்சல் காரணமாக, பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண், இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார். பல்லடம் அடுத்த சேட பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பின்னர் இருவரும் சேர்ந்து தறித்தொழில் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 6 வயதில் சன்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தினேஷ் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி நிர்மலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் “எவன் கூட தொடர்பில் இருக்க” என கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று(நவ 22) வழக்கம்போல் தினேஷ், அவரது தாய் சாந்தாமணி மற்றும் தம்பி கார்த்தி ஆகியோர் நிர்மலாவை திட்டியதுடன் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிர்மலா, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தறிக்கூடத்தில் இருந்த மண்ணெண்ணெயைத் தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், தினேஷ் தீயை அணைத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நிர்மலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். தகவலறிந்து வந்த பல்லடம் போலீசார், நிர்மலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், 90 சதவீத தீக்காயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிர்மலா, இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், தனது தற்கொலை முயற்சிக்கு கணவர் தினேஷ், மாமியார் சாந்தாமணி மற்றும் கணவரின் தம்பி கார்த்தி ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது 6 வயது குழந்தையை தனது தாய் வீட்டாரிடம் ஒப்படைத்து பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். நிர்மலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்லடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண் அளித்துள்ள குற்றச்சாட்டுகள் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்