“பிறந்த பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்கள்” - மருத்துவமனையில் நடந்த பக்கா பிளான்.. கருசிதைந்ததால் இப்படியா?

ஜெயப்பிரியா தனது தாயார் புவனாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குழந்தையை எடுத்துச் சென்று...
Thiruvallur Baby Kidnapping Case
Thiruvallur Baby Kidnapping Case
Published on: 
Updated on: 
2 min read

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 20 வயதுடைய பிரியதர்ஷினி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு (ஆக 23) ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு கடந்த (அக் 28) ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குப் பிறந்த சில நாட்களிலேயே மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, பிரியதர்ஷினியின் கணவருக்குத் தெரிந்த நபரான திருநின்றவூர் பள்ளத்தெரு, பெரிய காலனியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் ஜெயப்பிரியா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ஜெயப்பிரியா மூன்று மாதக் கர்ப்பமாக இருந்தபோது, கடந்த ஜூன் மாதம் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தனக்குக் குழந்தை பிறக்காது என எண்ணிய ஜெயப்பிரியா, பிரியதர்ஷினியின் பெண் குழந்தையை எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது தாயார் 38 வயதுடைய புவனா உடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த நவம்பர் 20-ம் தேதி பிரியதர்ஷினியின் வீட்டிற்குச் சென்ற ஜெயப்பிரியாவும் அவரது தாயார் புவனாவும் அவரிடம் நலம் விசாரித்துள்ளனர். அப்போது, மறுநாள் குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என ஜெயப்பிரியா தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரியதர்ஷினி, கடந்த நவம்பர் 21-ம் தேதி ஜெயப்பிரியா மற்றும் புவனாவுடன் ரயில் மூலம் திருநின்றவூரில் இருந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரைச் சந்தித்தபோது, குழந்தைக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிறந்து 24 நாட்களே ஆன குழந்தையைப் புவனாவிடம் ஒப்படைத்துவிட்டு, பிரியதர்ஷினியும் ஜெயப்பிரியாவும் திருவள்ளூர் தேரடி அருகே உள்ள கோகுல் ஸ்கேன் சென்டருக்குச் சென்று டோக்கன் பெற்றுள்ளனர். அப்போது, ஸ்கேன் பரிசோதனைக்கு அதிக நேரம் ஆகும் என்றும், மறுநாள் வருமாறும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஸ்கேன் சென்டரில் இருந்த ஜெயப்பிரியா தனது தாயார் புவனாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குழந்தையை எடுத்துச் சென்று தனக்குத் தெரிந்த விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லத்திகா என்பவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் தான் வந்து குழந்தையைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதன்படி, புவனா குழந்தையை எடுத்துச் சென்று லத்திகாவிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பியுள்ளார். இதற்கிடையே, குழந்தையைக் காணவில்லை என பிரியதர்ஷினியிடம் ஜெயப்பிரியா தெரிவித்துள்ளார். மேலும், யாரோ ஒருவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதாகவும், அவரைப் பிடிக்க போலீசார் விரட்டிச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். போலீசார் குழந்தையை மீட்டு கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவார்கள் எனப் பொய்யான தகவலைக் கூறி பிரியதர்ஷினியை நம்ப வைத்து, அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குழந்தை மீட்கப்படாததால் சந்தேகமடைந்த பிரியதர்ஷினி, திருநின்றவூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஜெயப்பிரியாவும் அவரது தாயார் புவனாவும் திட்டமிட்டு குழந்தையை விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லத்திகாவிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, லத்திகாவிடம் இருந்த பெண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து, ஜெயப்பிரியா மற்றும் அவரது தாயார் புவனா ஆகிய இருவரையும் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் வினோத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்காகத் தாயுடன் வந்த 24 நாள் பெண் குழந்தையைத் திட்டமிட்டு எடுத்துச் சென்று, கடத்தல் நாடகமாடிய சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.