சென்னை ECR- ல் இறால் பிடிக்க சென்ற சிறுவன் 
க்ரைம்

சென்னை ECR- ல் இறால் பிடிக்க சென்ற சிறுவனுக்கு நடந்த சோகம்.. கால்வாய் சேற்றில் மூழ்கி உயிரிழப்பு..!

பிரகலாதனின் நண்பர் அதிர்ச்சியடைந்த நிலையில் அங்கிருந்து ஓடி சென்றதாகவும் கூறப்படுகிறது..

மாலை முரசு செய்தி குழு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் - செல்லமீனா தம்பதி. இவர்களுக்கு பிரகலாதன் எனும் 13 வயது மகனும் உள்ளான். பிரகலாதன் முட்டுக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

கோடைக்கால பள்ளி விடுமுறை என்பதால், வீட்டிலிருந்த பிரகலாதன் நண்பருடன் சேர்ந்து பொழுதுபோக்கிற்காக இறால் பிடிக்க கடலுக்கு அருகில் உள்ள கெனால் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் அங்கு நடந்து சென்றபோது, அருகில் இருந்த கால்வாயில் பிரகலாதன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி, அடிப்பகுதியில் இருந்த சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தான். பிரகலாதனின் நண்பர் அதிர்ச்சியடைந்த நிலையில் அங்கிருந்து ஓடி சென்றதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் பிரகலாதன் வீட்டிற்கு திரும்பி வராததால், பிரகலாதனுக்கு என்ன ஆனது என்று கடும் கவலை அடைந்த பெற்றோர் பதற்றத்துடன் பல இடங்களில் தேடியுள்ளனர், தாய் தந்தை இருவரும் தெரிந்தவர்களிடம் பிரகலாதனை குறித்து தொலைபேசி மூலமாக விசாரித்துவந்தனர், மேலும் பிரகலாதன் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், வீட்டிற்கு அருகிலிருந்தவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, பிரகலாதனும் அவரது நண்பர் ஒருவரும் கெனால் பகுதியில் சென்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.

சென்னை ECR

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பிரகலாதனின் தாய் உடனடியாக சென்று காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். அதற்குப்பிறகு தகவலின் பேரில் கானத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர், அப்போது பள்ளமான பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கிய நிலையில் பிரகலாதனின் உடலை கண்டுபிடித்தனர். இச்செய்தி தெரியவந்ததும் பிரகலாதனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் பிரகலாதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, கானத்தூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க நண்பருடன் இறால் பிடிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம், பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் மாணவன் உயிரிழந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.