தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது 26 வயது மகன் அருணாச்சலம், தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையுடன் இணைந்த பாரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி அரசு மதுபானக் கடை மூடிய பிறகும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர் அருணாச்சலத்தை கைது செய்தனர். சுமார் 120 மதுபான பாட்டில்களை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதே நாள் மாலை அருணாச்சலம் தலை மற்றும் காலில் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். அருணாச்சலத்தின் உயிரிழப்பைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் திரண்ட அவரது உறவினர்கள், காவல் நிலைய விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், விசாரணைக்காக அழைத்துச் சென்ற நான்கு காவல்துறையினர் சேர்ந்து தாக்கியதாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். அப்போது பேசிய அருணாசலத்தின் தாய் “என் மகன் போலீசார் அடித்ததால் தான் உயிரிழந்தான்… இன்னும் எத்தனை பேரை கொல்ல போறீங்க?” என கூறி நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அருணாச்சலத்தின் உடலை வாங்க மாட்டோம் என்றும், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுடன் தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், அருணாச்சலத்தின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது அருணாச்சலம் இருப்பதற்கு முன் தன்னை போலீசார் அடித்ததாக வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.