tuticorin murder  
க்ரைம்

“உன்னால தான் என் பொண்டாட்டி வாழ வரல” - கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி.. மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்!

வைஷ்ணவி கடந்த 2 மாதங்களாக தனது தந்தை முனியசாமியின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், அவரது மருமகன் உட்பட 6 பேரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுத நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கிலி என்பவரது மகன் 45 வயதுடைய முனியசாமி. ஆட்டோ ஓட்டுநரான இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய முருகன் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக, வைஷ்ணவி கடந்த 2 மாதங்களாக தனது தந்தை முனியசாமியின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மனைவி மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வராததற்கு மாமனார் முனியசாமியே காரணம் என முருகன் கருத்தியுள்ளார். எனவே, கடந்த திங்கள்கிழமை மதுரையில் இருந்து தனது நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு வந்த முருகன், முனியசாமியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது “உன்னால தான் என் பொண்டாட்டி வாழ வரல” என குறை இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

tuticorin murder

இதனால் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவருடன் வந்தவர்கள் அரிவாளால் முனியசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முனியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முனியசாமி உயிரிழந்தார்.

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முனியசாமியின் மருமகன் முருகன் மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த நல்லமருது மகன் நல்லு முருகன் (24), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி எஸ்.கீரந்தையைச் சேர்ந்த குணசேகரன் மகன் திருமுருகன் (23), மதுரை மேல அனுப்பானடி வீடமைப்பு வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த முருகவேல் மகன் தீனதயாளன் (22), மதுரை சிந்தாமணி தங்க நாடார் காம்பவுண்டைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் பெருமாள் என்கிற படையப்பா (26), மதுரை சமணநத்தம் மேலத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் அரவிந்த் (25) ஆகியோர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மருமகன் முருகன் உள்ளிட்ட 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்