க்ரைம்

“கணவனை இழந்து வாழும் பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி” - இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை.. ஆலந்தூரில் பரபரப்பு!

திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை.

Mahalakshmi Somasundaram

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு திருமணமாகி கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். எனவே 160-வது வட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றி கழக (தவெக) செயலாளராக இருந்த வேம்புலி, கீதா தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தின் பொறுப்பாளராக பணியாற்ற வேண்டும் என்றால் தன்னுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் அதற்காக பல்வேறு வகைகளில் கீதாவிற்கு வேம்புலி தொல்லை அளித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், வேம்புலி இரவு நேரங்களில் தாய் தனியாக இருப்பதை அறிந்து தனது வீட்டிற்கு வந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவரது செயல்பாடுகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கீதா பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் புகாரின் அடிப்படையில் பரங்கிமலை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக கீதா மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விளக்கம் பெற்று வருகின்றனர். மேலும், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்களையும் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கட்சி வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வேம்புலி செயல்பட்டதாகக் கூறி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேம்புலி வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதுடன், அவரது அடிப்படை உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்படுகிறது’ என சரவணன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாரும் அவருடன் எந்தவிதமான கட்சி தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில் முன்னாள் பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் “தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.