மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலையபட்டி கிராம மந்தை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தலை மற்றும் முதுகில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகனான 38 வயதுடைய அம்ச கொடி என்பது தெரியவந்தது.
இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு மாடு வாங்கியதில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் அடிக்கடி ஊருக்குள் சண்டையிட்டு வந்த நிலையில் அம்சகொடியை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேலைக்கு வெளியூர் அனுப்பி வைத்திருக்கின்றனர். வெளியூர்களில் தங்கி வேலை செய்து வந்த அம்சகொடி அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வதை வழக்கமா வைத்திருந்த நிலையில் இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய அம்ச கொடி உறவியினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது ஊரின் மந்தையில் வைத்து அம்ச கொடியை வழிமறித்த போதையில் இருந்த வலையபட்டியைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் ராஜா (26), வலையபட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் நந்து (21), மற்றும் பெருமாள் நகரைச் சேர்ந்த பாண்டி மகன் குருவி மணிகண்டன் ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் தகராறில் ஈடுபட்டு இருக்கின்றனர். பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாள், மற்றும் கத்தியை எடுத்து அம்ச கொடியை தலை மற்றும் முதுகு பகுதியில் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர்.
அம்ச கொடியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது அம்சகொடி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பெருங்குடி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தேடுதல் வேட்டையில் மண்டேலா நகர் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக் ராஜா, நந்து, குருவி மணிகண்டன், விஜய், நாகேந்திரன் ஆகிய ஐவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை சம்பவம் அரங்கேறி அடுத்த 18 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலை தற்செயலாக நடந்ததா அல்லது திட்டம் மீட்டு கொலை செய்தார்களா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.