Jacqueline Mary Complaint 
க்ரைம்

“திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய தவெக நிர்வாகி?” - கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார்.. அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டலா?

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஜாக்குலின் மேரி புகாரில் குறிப்பிட்டுள்ள...

Mahalakshmi Somasundaram

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கட்சி நிர்வாகி ஒருவர் மீது பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வீடியோ ஆதாரங்களைக் காட்டி மிரட்டியதாகவும், கர்ப்பமாக்கிய பின்னர் கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஜாக்குலின் மேரி, திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சியில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிகுமார் தன்னிடம் அறிமுகமாகிப் பழகியதாக ஜாக்குலின் மேரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து செல்போனில் தொடர்புகொண்டு பேசிய சசிகுமார், தன்னைத் தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஜாக்குலின் மேரி புகாரில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு இணங்க மறுத்தால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வீடியோ ஆதாரங்களைக் காட்டி தொடர்ந்து மிரட்டியதாகவும், தன்னை கர்ப்பமாக்கிய பின்னர் மிரட்டி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் ஜாக்குலின் மேரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் தளபதி மணியிடம் தெரிவித்தபோது, விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி தன்னை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் தொடர்பான கூடுதல் விவரங்களும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் வெளியாகலாம். கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகி மீது பெண் புகார் அளித்துள்ள சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.