Admin
க்ரைம்

“முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்து கொலை” - ஏரிக்கரையில் கிடந்த பெண் சடலம்.. ஆள் நடமாட்டம் இல்லா பகுதியில் 7.41 மணிக்கு நடந்தது என்ன?

இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக இருந்து வருவதாக...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு, முகம் எரிந்த நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம் என போலீசார் கருதும் நிலையில், அவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த தொட்டாரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே, ஊருக்கு ஒதுக்குப்புறமான வெள்ளாகுளம் பகுதியில் நேற்று இரவு மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

அந்த வழியாக இன்று காலை காலைக்கடன் கழிக்கச் சென்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவரது முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும், முகம் எரிந்த நிலையில் இருந்ததும் போலீசாரின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

பெண்ணை வேறு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை வெள்ளாகுளம் பகுதிக்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்களா? அல்லது அந்தப் பகுதியிலேயே அவரை கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடைபெற்றதாக கூறப்படும் பகுதி இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு சுமார் 7.41 மணியளவில் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் பகுதியில் இருந்து வேறு ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொலைபேசி அழைப்பு யாருக்கு சென்றது, அழைப்பு மேற்கொண்டவர் யார், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அந்த அழைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்து செல்போன் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த செல்போன் யாருடையது, அதில் பதிவாகியுள்ள அழைப்புகள் மற்றும் தகவல்கள் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தையும், கொலையாளிகள் குறித்த தகவல்களையும் கண்டறிய போலீசார் முயன்று வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை டிஎஸ்பி வினோத் மற்றும் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் அடையாளம் என்ன, அவர் எங்கிருந்து வந்தார், அவருடன் வந்தவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன, ஆசிட் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், சம்பவ நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட தகவல்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சமீப காலமாக அடுத்தடுத்து கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற ஓட்டுநர் ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், தற்போது பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் மற்றும் இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசாரின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.