உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பாரத் சிட்டி குடியிருப்பு வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாக்கி (12), பிராச்சி (14) மற்றும் விஷிகா (16) ஆகிய மூன்று சகோதரிகளும் நள்ளிரவு 2:15 மணியளவில் தங்களது அறையைப் பூட்டிக்கொண்டு, பால்கனி வழியாக ஒருவர் பின் ஒருவராகக் குதித்துள்ளனர். அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பதறியோடி வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் பார்த்தபோது, மூன்று சிறுமிகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மரணத்திற்கு முன்னதாக அந்தச் சிறுமிகள் ஒரு பாக்கெட் டைரியில் 8 பக்கங்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அதில், "மன்னிக்கவும் அப்பா.. இந்த டைரியில் எழுதியுள்ள அனைத்தையும் படியுங்கள், இதில் இருப்பதுதான் உண்மை," என்று எழுதி ஒரு பெரிய அழும் முகக் குறியீட்டையும் (Emoji) வரைந்துள்ளனர். மேலும் அவர்களது அறையின் சுவரில், "நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன், என் வாழ்க்கை மிகவும் தனிமையானது" என்று எழுதியிருந்தது காண்போரின் கண்களைக் குளமாக்கியது. அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் வரை அவர்களது பெற்றோருக்கு இந்த விபரீதத் திட்டம் குறித்துத் தெரியாமல் போனது பெரும் சோகமாகும்.
இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் கொடிய ஆன்லைன் விளையாட்டுக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொரோனா காலகட்டத்திலிருந்தே இந்தச் சிறுமிகள் ஒரு குறிப்பிட்ட கொரியன் டாஸ்க் கேமிற்கு (Online task-based Korean game) அடிமையாக இருந்துள்ளனர். அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருந்ததென்றால், தங்களுக்குத் தாங்களே கொரியன் பெயர்களைச் சூட்டிக் கொண்டதோடு, அந்த விளையாட்டில் கொடுக்கப்படும் சவால்களையும் செய்து வந்துள்ளனர். "எங்களால் கொரியாவை விட்டு வெளியேற முடியாது, அதுவே எங்கள் வாழ்க்கை, எங்களை யாராலும் விடுவிக்க முடியாது" என்று அவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி பிராச்சிதான் தனது மற்ற இரு சகோதரிகளையும் வழிநடத்தி இந்த விபரீத முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்ததும், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாகத் தேர்வுகளில் சரியாகச் செயல்படாததும் இவர்களை ஆன்லைன் விளையாட்டுகளை நோக்கித் தள்ளியுள்ளது. கடந்த சில நாட்களாகத் தந்தை செல்போன் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதித்ததே இவர்களை இந்த விபரீத முடிவுக்குத் தூண்டியிருக்கலாம் என்று துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
தனது மூன்று மகள்களைப் பறிகொடுத்த தந்தை குமார், கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். "இதுபோன்ற விளையாட்டுகள் குறித்து எனக்குத் தெரிந்திருந்தால் என் பிள்ளைகளை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு தந்தைக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது. உங்கள் குழந்தைகளை வீடியோ கேம்கள் விளையாட அனுமதிக்காதீர்கள்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.