மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய மணிகண்டன். இவருக்கும், வாடிப்பட்டி தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வெளியில் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்தபோது, அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாணவிக்குத் தெரியாமல் மணிகண்டன் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில் மணிகண்டனின் நடவடிக்கைகள் பிடிக்காததால், கடந்த சில நாட்களாக மாணவி அவருடன் பேசுவதையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் பலமுறை மணிகண்டன் மாணவியை தொடர்புகொள்ள முயற்சித்து அவர் மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், மிரட்டும் நோக்கத்தில் இருவரும் தனிமையில் இருந்தபோது மாணவிக்கு தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாணவியின் அனுமதியின்றி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக மாணவியின் பெற்றோர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று நடந்த சம்பவம் குறித்து புகாரளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணிகண்டன் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. எனவே அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார் மாணவி சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
மேலும் வேறு யாருக்கேனும் பகிரப்பட்டுள்ளதா அல்லது வேறுயாரிடமாவது வீடியோ உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, மணிகண்டனைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். காதலி பேசுவதைத் தவிர்த்ததால், அவருடைய தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.