Vanur Irumbai Road Accident 
க்ரைம்

“ஒரே விபத்தில் பறிபோன மொத்த குடும்பம்” - ஸ்கேட்டிங் முடிந்து மகிழ்ச்சியுடன் சென்றவர்களுக்கு அதிர்ச்சி.. நொடியில் நடந்த கொடூரம்!

இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது...

Mahalakshmi Somasundaram

விழுப்புரம், வானூர் அருகே ஸ்கேட்டிங் பயிற்சியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் காயமடைந்த கணவர் மற்றும் 8 வயது மகன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். ஏற்கனவே இந்த விபத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதுடைய தமிழ். இவரது மனைவி 32 வயதுடைய குணாவதி. இவர்களுக்கு கீர்த்தன் குருபரன் (8) என்ற மகன் இருந்தார்.

இந்நிலையில், தமிழ் தனது மனைவி மற்றும் மகனுடன் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், வானூர் அருகே இரும்பை சந்திப்புப் பகுதியில் ஸ்கேட்டிங் பயிற்சிக்காகச் சென்றிருந்தார். பயிற்சியை முடித்துவிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, பின்னால் காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி காந்தி நகரைச் சேர்ந்த 29 வயதுடைய ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டி வந்த பாலினோ கார் அதிவேகமாக வந்து மூவர் மீதும் மோதியதாகத் தெரிகிறது.

இந்தக் கோர விபத்தில் குணாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தமிழ் மற்றும் அவரது மகன் கீர்த்தன் குருபரன் ஆகியோர் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் மற்றும் அவரது மகன் கீர்த்தன் குருபரன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று (அக் 21) உயிரிழந்தனர். இதனால், ஒரே விபத்தில் தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பாகவும், இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஸ்கேட்டிங் பயிற்சிக்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.