“யூடியூப் விமர்சனம்.. இன்ஸ்டாகிராம் முடக்கம்” - சென்னையில் நிதி ஆலோசகர் ஹரீஷ் உயிரிழப்பு.. என்ன நடந்தது?

இதற்கிடையே, ஜேசன் சாமுவேல் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் ஹரீஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்...
Harish Finance Influencer Death
Harish Finance Influencer Death
Published on: 
Updated on: 
1 min read

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஹரீஷ், வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆன்லைன் நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்த நிலையில், யூடியூப் விமர்சனங்களால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மன உளைச்சல் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ஹரீஷ், ‘ஹரீஷ் கேப்பிட்டல் & டிஜிட்டல் சர்வீஸ்’ என்ற பெயரில் ஆன்லைன் நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜேசன் சாமுவேல் (Jason Samuel) என்ற யூடியூபர், ‘Dark World of Finance Influencers’ என்ற தலைப்பில் ஹரீஷ் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், ஹரீஷ் உரிய செபி (SEBI) உரிமம் இன்றி நிதி ஆலோசனைகளை வழங்குவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக ஹரீஷ் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரீஷ் இன்று(அக் 20) காலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், கானாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரீஷின் மரணத்துக்கும் யூடியூப் விமர்சனங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எனினும், இந்தத் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிடையே, ஜேசன் சாமுவேல் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் ஹரீஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஹரீஷைத் தனிப்பட்ட முறையில் துன்புறுத்தவில்லை என்றும், உரிய உரிமம் இல்லாமல் நிதி ஆலோசனை வழங்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

முறையான உரிமம் பெற்று மீண்டும் பணியைத் தொடருமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஹரீஷின் மரணத்துக்கான காரணம் மற்றும் அதற்கு முந்தைய சூழ்நிலைகள் குறித்து கானாத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதள பக்கம் முடங்கப்பட்டதாலும், தவறான விமர்சனங்கள் வந்ததாலும் நிதி ஆலோசனை தரும் யூடியூபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com